செய்திகள்

ஜெயலலிதா பற்றி விமர்சனம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடும்பாவி எரிப்பு - ஜெ.தீபா அணியினர் கைது

Published On 2017-05-27 10:28 GMT   |   Update On 2017-05-27 10:28 GMT
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்க எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் கொடும்பாவியை எரித்த ஜெ.தீபா அணியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பேட்டி கொடுத்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்று விமர்சித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிராட்வே பஸ் நிலையம் குறளகம் அருகே அ.தி.மு.க. ஜெ.தீபா அணியைச் சேர்ந்தவர்கள் பி.கே.மாரி தலைமையில் ஒன்று திரண்டு இளங்கோவனின் கொடும்பாவியை எரித்தனர்.

உடனே பூக்கடை போலீசார் விரைந்து சென்று மாரி, தேவி கணேசன், பன்னீர்செல்வம், பாஸ்கர், கரூர் யுவராஜ், வில்வம் கிருஷ்ணன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

முன்னதாக அங்கு வந்த போலீசார் கொடும்பாவி கொளுத்துவதற்காக கூடி நின்றவர்களையும் முன் கூட்டியே விரட்டி விரட்டி தேடி பிடித்து கைது செய்தனர்.

கொடும்பாவி கொளுத்த வந்தவர்கள் போலீசாரையும் அலைய விட்டனர். இதனால் குறளகம் பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News