செய்திகள்

போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு

Published On 2017-05-16 07:47 GMT   |   Update On 2017-05-16 07:47 GMT
அரசு பஸ்களில் ஜெயலலிதா படம் வைத்த போக்குவரத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க வாரத்துக்கு 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் அவசர வழக்குகளை விசாரிக்கும் 3 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி மகாதேவனிடம், இன்று காலையில் டிராபிக் ராமசாமி ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அதில், ‘பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14-ந்தேதி இரவு முதல் தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களால் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியவில்லை. சுப, துக்க நிகழ்ச்சிக்காக வெளியூருக்கும் செல்ல முடியவில்லை. இந்த நிலையில், தமிழக அரசு தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்குகின்றது.


இந்த பஸ்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு போதிய முன் அனுபவம் இல்லை. அதனால், அவர்கள் ஓட்டும் பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, இது குறித்து இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, தமிழக அரசுக்கு தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்.

தற்போது தமிழக அரசு இயக்கும் சிறப்பு பஸ்களில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர். தண்டனை பெற்ற குற்றவாளியின் புகைப்படத்தை அரசு பஸ்களில் வைத்த, போக்குவரத்து துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.மகாதேவன், இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
Tags:    

Similar News