செய்திகள்

அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் போராட்டம் 16-வது நாளாக நீடிப்பு

Published On 2017-05-04 05:25 GMT   |   Update On 2017-05-04 05:25 GMT
மருத்துவ பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு, நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் நடத்தி வரும் போராட்டம் 16-வது நாளாக நீடித்து வருகிறது.
சென்னை:

மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு கோரியும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கடந்த மாதம் 19-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதம், தர்ணா, ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி ஆகியவை நடந்து வருகிறது.

இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைகள் அளிப்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைகளும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் மீண்டும் நேற்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து போராட்டம் தொடரும் என்று டாக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அரசு டாக்டர்களின் போராட்டம் 16-வது நாளாக நீடிக்கிறது.



அரசு டாக்டர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் இன்று உண்ணாவிரதம் இருந்தனர். இதுபோல கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி, டி.எம்.எஸ். வளாகத்தில் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை மருத்துவ கல்லூரி வளாகத்தில் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

அரசு டாக்டர்கள், மருத்துவ மாணவர்களின் போராட்டத்தால் அறுவை சிகிச்சை இன்று 2-வது நாளாக நிறுத்தப்பட்டன. அவசர அறுவை சிகிச்சை தவிர ஏனைய அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்பட்டன.

மேலும் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் இன்றும் நடத்தப்படவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆபரே‌ஷன் 2-வது நாளாக நிறுத்தப்பட்டதால் உள் நோயாளிகள் சிரமப்பட்டனர். அவர்களுக்கு அளிக்க கூடிய சிகிச்சைகள் தள்ளிப்போகின்ற நிலை உருவாகி உள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் சுமார் 5000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்வார்கள். உள்நோயாளிகளாக 2000-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அங்கு புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால் உள் நோயாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அறுவை சிகிச்சை எதுவும் நடைபெறவில்லை. சென்னை மருத்துவ கல்லூரியில் (எம்.எம்.சி.) பணியாற்றும் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மூலம் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நாராயணசாமி கூறியதாவது:-

டாக்டர்களின் போராட் டத்தால் புற நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவசர அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. ஒரு சில ஆபரே‌ஷன்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் குறைவு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் டாக்டர்களை தற்போது பயன்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறுகையில்,

சுகாதாரத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஆனாலும் எங்களது போராட்டம் தொடரும். தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி இந்திய மருத்துவ கவுன்சிலில் சட்ட திருத்தம் செய்ய அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதுவரையில் அரசு டாக்டர்கள் தொடர்ந்து போராடுவார்கள்.

8-ந்தேதி தமிழகம் முழுவதும் ‘ஸ்டிரைக்‘ நடைபெறும் என்றார்.


Tags:    

Similar News