செய்திகள்

போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்த டி.டி.வி.தினகரன்

Published On 2017-04-28 03:16 GMT   |   Update On 2017-04-28 03:16 GMT
சென்னையில் விசாரணைக்காக டி.டி.வி.தினகரனை அவரது வீட்டுக்கு அழைத்து செல்லும் போது போலீஸ் ‘எஸ்கார்டு’ வாகனத்தில் ஏற மறுத்து விட்டார்.
சென்னை:

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து அவரை டெல்லி போலீசார் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அழைத்து செல்வதற்காக 2 டெம்போ வாகனங்கள், ஒரு போலீஸ் எஸ்கார்டு வாகனம், ஒரு தனியார் டிராவல்ஸ் காரும் வந்தன.

விமானநிலையத்துக்கு வெளியே நின்று இருந்த தனியார் டிராவல்ஸ் காரில் டி.டி.வி.தினகரனை டெல்லி போலீசார் ஏற்றினார்கள். 2 டெம்போ வாகனத்தில் அதிரடி விரைவுப்படையினர் இருந்தனர். அதில் ஒரு வாகனத்தில் டி.டி.வி.தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனை ஏற்றினார்கள்.

அங்கிருந்து அவர்கள் பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடைய நண்பரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அங்கு விசாரணையை முடித்த பின்னர், பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக ராஜாஜி பவனில் இருந்து வெளியே வந்தனர்.

அப்போது டி.டி.வி.தினகரனை போலீஸ் ‘எஸ்கார்டு’ வாகனத்தில் ஏறுமாறு நிர்ப்பந்தப்படுத்தினார்கள். ஆனால் அவர் அதில் ஏற மறுத்தார்.

இருப்பினும் போலீசார் அவரை அந்த காரில் ஏற்றினார்கள். விமானநிலையத்தில் இருந்து டி.டி.வி.தினகரன் வந்த தனியார் டிராவல்ஸ் காரில் அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனை போலீசார் ஏற்றி அழைத்து சென்றனர். 

Similar News