செய்திகள்

ஒடுகத்தூர் அருகே 5 ஆண்டு தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது

Published On 2017-04-26 10:45 GMT   |   Update On 2017-04-26 10:45 GMT
ஒடுகத்தூர் அருகே 5 ஆண்டு தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த பட்டிக் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் முத்து என்ற அண்ணாமலை. இவருக்கு சங்கர் (வயது 25), சுப்பிரமணி (23), சாமிநாதன் (21), ரமேஷ் ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், நெக்லி கிராமத்தை சேர்ந்த சின்னபையன் மகன் சங்கர் (18) என்பவர் பட்டிக்கொல்லை கிராமத்தின் தெரு வழியாக டிராக்டரை ஓட்டி சென்றார். அப்போது அண்ணாமலை வீட்டிற்கு சென்ற மின்சார வயர் டிராக்டரில் சிக்கிக்கொண்டு துண்டிக்கப்பட்டது. துண்டிக்கப்பட்ட வயரை சீரமைத்து தர வேண்டுமென டிராக்டரை ஓட்டிவந்த சங்கரிடம் கேட்டனர்.

இதுதொடர்பாக ஊர் பொதுமக்களிடம் பஞ்சாயத்து பேசி துண்டிக்கப்பட்ட வயருக்கான தொகையை கேட்டனர். ஆனால் சங்கர் அதற்குண்டான தொகையை தரவில்லை.

இந்த நிலையில் பட்டிக்கொல்லை கிராமத்தில் 2012-ம் ஆண்டு திருவிழா நடந்தது. இந்த திருவிழாவுக்கு சங்கர் வந்ததாக தெரிகிறது. இதை பார்த்த சாமிநாதன், சங்கர், சுப்பிரமணி, ரமேஷ் ஆகியோர் பணத்தை தராமல் இதுவரை ஏமாற்றிவிட்டாய் என்று சங்கரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அப்பகுதி மக்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து சங்கரின் தந்தை சின்னபையன் ஜமுனாமரத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் போரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சங்கர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சாமிநாதன், சங்கர், சுப்பிரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதில் முக்கிய குற்றவாளியான ரமேஷ் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் ஜமுனாமரத்தூர் போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் இருந்த 30 கிராமங்கள் கடந்த 4 மாதத்திற்கு முன்பு வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டன. இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ரமேசை கைது செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகம் வேப்பங்குப்பம் போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் பட்டிக்கொல்லை கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ் பீஞ்சமந்தை கிராமத்தில் உள்ள அஞ்சலக அலுவலகத்திற்கு பணம் எடுக்க வந்ததாக தெரிகிறது. இந்த தகவல் போலீசாருக்கு தெரிந்தவுடன் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேசை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

போலீசாரால் தேடப்பட்டு வந்த ரமேஷ் 5 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News