செய்திகள்

அமைச்சரின் காரை முற்றுகையிட்டு தாக்குதல்: டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் 4 பேர் கைது

Published On 2017-04-24 02:06 GMT   |   Update On 2017-04-24 02:06 GMT
திருச்சியில் அமைச்சரின் காரை முற்றுகையிட்டு தாக்கிய சம்பவத்தில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி மலைக்கோட்டையின் மேல் பகுதியில் ரூ.1 கோடி செலவில் புதிதாக எல்.இ.டி. விளக்குகள் மற்றும் தொலைநோக்கி கருவி அமைக்கப்பட்டது. இதனை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்தது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, குமார் எம்.பி. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து அமைச்சர்கள் மற்றும் எம்.பி. காரில் புறப்பட்டபோது, டி.டி.வி. தினகரன் தரப்பு ஆதரவாளர்கள் சிலர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் காரை முற்றுகையிட்டு அவரை பதவி விலககோரி கோஷமிட்டனர்.

இதனால் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், “அமைச்சர்களின் காரை முற்றுகையிட்டு தன்னையும், கட்சி நிர்வாகிகளையும் கல்வீசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இந்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்களான திருவானைக்காவலை சேர்ந்த ராஜராஜசோழன், பொன்மலையை சேர்ந்த திருச்செல்வம், உய்யகொண்டான்திருமலையை சேர்ந்த மனோகரன், முருகன் ஆகிய 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் அவர்கள் 4 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். கைதான 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Similar News