செய்திகள்

தர்மபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரணம்-குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

Published On 2017-04-23 11:14 GMT   |   Update On 2017-04-23 11:14 GMT
தர்மபுரி மாவட்டத்தில் வறட்சி நிவாரணம் - குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அணைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை விவேகானந்தன் முன்னிலையில் நடைபெற்றது.

பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

நமது மாவட்டத்தில் நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததினால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்குவதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் குடிநீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, உடனுக்குடன் குறைகள் மோட்டார் பழுதுகள் சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கும் குடிநீர் பற்றாக்குறையினை போக்க 2016-17ம் ஆண்டில் பொது நிதி மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 246 குடிநீர் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 14வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் குடிநீர் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

நமது மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. கால்நடை துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளையும், சுகாதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டுமெனவும், கடந்த ஆண்டுகளில் மாவட்டத்தில் பல திட்டங்களின் மூலம் குடிநீர் பணிகள் செய்ய நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள குடிநீர் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. இப்பணிகளை முடிப்பதின் மூலம் குடிநீர் பற்றாக்குறையினைகளைய முடியும்.

பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒகேனக்கல் குடிநீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். வேறு பணிகள் குளிப்பது, துவைப்பது போன்றவற்றிற்கு பயன்படுத்தக்கூடாது.

தற்போது ஒகேனக்கல்லில் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டதால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வழங்கப்படும் குடிநீரை சிக்கனமாகவும், குடிநீருக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காளிதாசன், மகளிர் திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட முதன்மை பொறியாளர் இளங்கோவன், பொதுப்பணித்துறை (குடிநீர் ஆதாரம்) செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரா. சண்முகசுந்தரம், வருவாய் கோட்ட அலுவலர்கள் ராமமூர்த்தி, கவிதா, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் மரிய எல்சி, நகராட்சி ஆணையர் (பொ) குணாளன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் அரங்கநாதன் உட்பட துறை ரீதியான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News