செய்திகள்

டெல்லி போலீசில் நாளை ஆஜராக டி.டி.வி.தினகரனுக்கு உத்தரவு

Published On 2017-04-21 02:48 GMT   |   Update On 2017-04-21 02:48 GMT
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த தாக தொடரப்பட்ட வழக்கில் டி.டி.வி.தினகரன் நாளை டெல்லி போலீசில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:

ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலைக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியும், சசிகலா அணியும் மல்லுக்கட்டினர். 2 அணியினரும் ஒரே சின்னத்துக்கு உரிமை கோரியதை தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.



இந்த நிலையில், கடந்த 16-ந் தேதி சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை டெல்லியில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக தன்னிடம் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுகேஷ் சந்திரசேகர் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

சுகேஷ் சந்திர சேகர் கொடுத்த தகவல் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சென்னையிலும் விசாரணை நடத்த டெல்லி போலீசார் திட்டமிட்டனர். டி.டி.வி.தினகரன் வெளிநாட்டு குடியுரிமை கொண்ட இந்தியர் என்பதால் அவர் எந்நேரமும் வெளிநாட்டுக்கு செல்லலாம் என்ற எண்ணத்தில் அவரை தேடப்படும் நபராக அறிவித்து, இது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிவிப்பு தரப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி போலீஸ் உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத், இன்ஸ்பெக்டர் நரேந்திர ஷாகல் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சென்னை பெசன்ட் நகரில் உள்ள டி.டி.வி.தினகரனின் இல்லத்துக்கு வந்தனர். டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்திய பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் டி.டி.வி.தினகரனிடம் சம்மன் வழங்கப்பட்டது. சனிக்கிழமை ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது.

“எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு ஆஜராவதற்கு தயாராக இருக்கிறேன்”, என்று டி.டி.வி.தினகரன் அவர்களிடம் கூறினார்.

சம்மனை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசில் நாளை ஆஜர் ஆவார் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே அவர் போலீசில் ஆஜராக 3 நாள் அவகாசம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதை டெல்லி போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

ஜெயலலிதா மறைவு, சசிகலா பொதுச்செயலாளராக பதவி ஏற்றது, புதிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்வு, சசிகலா கைதாகி சிறை சென்றது, கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் பதவி ஏற்றது என அடுத்தடுத்த சம்பவங்களால் அரசியல் களம் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரனை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை எடுத்த முடிவு தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் டெல்லி போலீசில் ஆஜராக இருப்பது மீண்டும் அரசியல் களத்தை சூடாக்கி இருக்கிறது.

Similar News