செய்திகள்

டெல்லி பயணம் திடீர் ரத்து: பாதி வழியில் திரும்பிய முதல்-அமைச்சர் நாராயணசாமி

Published On 2017-04-05 09:33 GMT   |   Update On 2017-04-05 09:33 GMT
புதுவையில் இருந்து டெல்லிக்கு காரில் புறப்படும் போது வந்த தகவலையடுத்து டெல்லி பயணத்தை ரத்து செய்து முதலமைச்சர் நாராயணசாமி புதுவைக்கு திரும்பினார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையிலான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது.

இதையடுத்து புதுவையில் அனைத்துக்கட்சி கூட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்தது. கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமரை நேரில் சந்தித்து கவர்னரை திரும்ப பெற வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டது.

இன்று கட்சி தலைமையின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி செல்வதாக இருந்தது. இன்று காலை 10 மணிக்கு சென்னைக்கு அவர் புறப்பட்டார். மதியம் 1.30 மணி விமானத்தில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்றபோது வந்த தகவலையடுத்து நாராயணசாமி டெல்லி செல்லாமல் புதுவைக்கு திரும்பினார். சட்டசபைக்கு வந்த அவர் முதல்-அமைச்சர் அறையில் தன் பணிகளை தொடர்ந்தார்.


அவர் அலுவலகத்துக்கு திரும்பிய சிறிது நேரத்தில் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா முதல்- அமைச்சர் அறைக்கு வந்தார். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தனர்.

நாராயணசாமி டெல்லி பயணத்தை ஏன் திடீரென ரத்து செய்தார்? இடையில் அவருக்கு என்ன தகவல் வந்தது? அவரை தலைமை செயலாளர் அவசரமாக வந்து சந்தித்தது ஏன்? என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை.

ஆனால், கவர்னருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஏதேனும் முக்கிய அவசர தகவல் வந்திருக்க வேண்டும். எனவே தான் நாராயணசாமி டெல்லி பயணத்தை திடீரென்று ரத்து செய்து இருக்கிறார் என கூறப்படுகிறது.

Similar News