செய்திகள்

சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை

Published On 2017-03-30 05:56 GMT   |   Update On 2017-03-30 05:56 GMT
அனைத்து சுங்கச்சாவடிகளை படிப்படியாக மூட வேண்டும் அல்லது சுங்கக்கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 350 க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் சுமார் 44 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பெரும்பாலான சுங்கச் சாவடிகள் தனியார் கட்டுப்பாட்டிலும், குறைவான எண்ணிக்கையில் உள்ள சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் வாகன ஓட்டுநரிடம் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

மத்திய அரசு ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் சுங்கக்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 44 சுங்கச்சாவடிகளில் இப்போது சுமார் 18 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயரப்போகிறது.


இவ்வாறு கட்டணம் உயரும்போது விலைவாசி உயரும். குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, சரக்கு கட்டணம் மற்றும் போக்கு வரத்துக்கான பயணக் கட்டணமும் உயரும். இதனால் பெருமளவு பாதிக்கப்படுவது சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான்.

மேலும் சுங்கக்கட்டணம் உயர்வால் லாரி உரிமையாளர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள், சுற்றுலாப் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். வாகன உரிமையாளர்கள் அவர்களின் வாகனத்திற்கு சாலை வரி செலுத்தி வருகிறார்கள். மேலும் எதற்காக சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும்.

சுங்கச்சாவடிகளை பராமரிப்பதற்காகவும், பொருளாதாரத்தை ஈட்டுவதற்காகவும் மக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு சுங்கக்கட்டணத்தை திணிப்பது ஏற்புடையதல்ல.

மேலும் மத்திய அரசு காலாவதியான சுங்கச் சாவடிகளை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்கு உடனடியாக அகற்றிட வேண்டும். முக்கியமாக அனைத்து சுங்கச்சாவடிகளையும் படிப்படியாக மூட வேண்டும். அல்லது சுங்கக்கட்டணத்தை அடியோடு ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் மத்திய அரசே சுங்கக்கட்டணத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

ஏற்கனவே விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள் போதிய பொருளாதாரமின்றி வாழ்கின்ற சூழலில் இது போன்ற நடவடிக்கைகளில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபடக்கூடாது என்று த.மா.கா. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News