செய்திகள்

புதுவை சட்டசபை நாளை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நாராயணசாமி

Published On 2017-03-29 04:12 GMT   |   Update On 2017-03-29 04:12 GMT
புதுவை சட்டசபை நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு கூடுகிறது. கூட்டத்தில் நிதி அமைச்சரும், முதல்-அமைச்சருமான நாராயணசாமி நடப்பு நிதி ஆண்டின் கூடுதல் செலவீனங்களை தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்ட தொடர் ஆண்டு தோறும் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் இறுதி வரை நடைபெறும்.

என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த நடைமுறை மாறியது. கடந்த 5 ஆண்டு காலமாக மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

அதற்கு பதிலாக மார்ச் மாதம் 4 அல்லது 6 மாதங்களுக்கான அரசு செலவீனங்களுக்கு (இடைக்கால பட்ஜெட்) நிதி ஒதுக்கப்பட்டு சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும். பிறகு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

அதே போல் இந்த நிதி ஆண்டும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. 3 அல்லது 4 மாதங்களுக்காக அரசு செலவீனங்களுக்கு சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப்படுகிறது.


இதற்காக புதுவை சட்டசபை நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு கூடுகிறது. கூட்டத்தில் நிதி அமைச்சரும், முதல் -அமைச்சருமான நாராயணசாமி நடப்பு நிதி ஆண்டின் கூடுதல் செலவீனங்களை தாக்கல் செய்கிறார்.

தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்கிறார். இதன் மீது விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு மூலம் சபையின் ஒப்புதல் பெறப்படுகிறது. நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) சபை நடக்கிறது.

புதுவை சட்டசபையின் முழுமையான பட்ஜெட் அனேகமாக மே அல்லது ஜூன் மாதம் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

Similar News