செய்திகள்

திருச்செந்தூர் பகுதியில் இயங்கி வந்த மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு சீல் வைப்பு

Published On 2017-03-26 12:24 GMT   |   Update On 2017-03-26 12:24 GMT
திருச்செந்தூர் பகுதியில் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று பெறாமல் இயங்கி வந்த மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை மையங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் அருகேயுள்ள நா.முத்தையாபுரம் பகுதியில் இயங்கி வந்த இரண்டு மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு நிறுவனங்களும் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதில் ஒரு நிறுவனம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு இல்லாமலும் இயங்கி வந்துள்ளது. இந்த ஆய்வை தொடர்ந்து நிறுவனங்களுக்கு ஐ.எஸ்.ஐ. தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற அதிகாரிகள் அறிக்கை அனுப்பினர்.

இதனைத்தொடர்ந்து இதுவரை அவர்கள் உரிமம் பெற நடவடிக்கை எடுக்காததால் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் இரண்டு நிறுவனங்களுக்கும் சீல் வைத்து மூடப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பொன்முத்து ஞானசேகர், கணேஷ்குமார், மாரியப்பன், குருசாமி திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வி.ஏ.ஓ. கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News