செய்திகள்

செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 3 கோடி செம்மரக்கட்டை பறிமுதல்

Published On 2017-03-19 12:24 GMT   |   Update On 2017-03-19 12:24 GMT
செங்குன்றம் அருகே குடோனில் பதுக்கிய ரூ. 3 கோடி செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செங்குன்றம்:

சோழவரத்தை அடுத்த நல்லூர் ஊராட்சி நாகாத்தம்மன் நகர் மேட்டு பகுதியில் உள்ள குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சோழவரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இன்று அதிகாலை போலீசார் அந்த குடோனை அதிரடியாக முற்றுகையிட்டு சோதனை நடத்தினர். அங்கு சுமார் 5 டன் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டு இருந்தது.

இதன் மதிப்பு சுமார் ரூ. 3 கோடி இருக்கும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் செங்குன்றத்தை அடுத்த பி.டி.மூர்த்தி நகரை சேர்ந்த ஒருவருக்கு சொந்த மானது என்று தெரிகிறது. அவர் மீது ஏற்கனவே ஆந்திரா, சென்னையில் செம்மரக் கடத்தல் வழக்குகள் உள்ளன.

அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் சிக்கினால் தான் செம்மரக்கட்டை எங்கிருந்து யாருக்கு கடத்தப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றிய விவரம் தெரியவரும்.

Similar News