செய்திகள்

புதுவை சட்டசபையை முற்றுகையிட்ட சட்டக்கல்லூரி மாணவர்கள்

Published On 2017-03-14 09:26 GMT   |   Update On 2017-03-14 09:26 GMT
தமிழ் தெரிந்த விரிவுரையாளரை நியமிக்க கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று சட்டசபையை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டில் அரசு சட்டக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு மத்திய அரசின் தேர்வாணையம் மூலம் சமீபத்தில் 12 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தமிழ் மொழி தெரியவில்லை. அதே வேளையில் அங்கு ஏற்கனவே பணிபுரிந்து வந்த மணிநேர விரிவுரையாளர்கள் 7 பேரை பணி நீக்கம் செய்துவிட்டனர்.

இதனால் தமிழ் தெரிந்த விரிவுரையாளர்களை நியமிக்க கோரி சடடக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்பை புறக்கணித்து விட்டு சட்டசபைக்கு வந்தனர்.

அவர்கள் சட்டசபை நுழைவு வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்கள் விரிவுரையாளர்களை நியமிக்க கோரி கோ‌ஷம் எழுப்பினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து முதல்- அமைச்சர் நாராயணசாமியிடம் முறையிடுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

அதனை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் மாணவர் பிரதிநிதிகள் 5 பேர் மட்டும் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து தமிழ் விரிவுரையாளரை நியமிக்க கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

Similar News