செய்திகள்

கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் யு.பி.எஸ். இல்லாததே நோயாளிகள் பலியாக காரணம்

Published On 2017-03-10 06:18 GMT   |   Update On 2017-03-10 06:18 GMT
கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் யு.பி.எஸ். வசதி இல்லாததே 3 நோயாளிகளின் உயிரிழப்புக்கு காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
புதுச்சேரி:

கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் மின் தடையால் நேற்று 3 நோயாளிகள் இறந்தனர்.

டயாலிசிஸ் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டு இருந்த போது திடீரென மின்தடை ஏற்பட்டது. மின் தடையை சமாளிக்க ஜெனரேட்டர் வசதி இருந்தும் டயாலிசிஸ் பிரிவுக்கு மின்சாரம் வரவில்லை.

இதனால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. கருவி செயல்படாததால் ரத்தம் ஓட்டம் நின்றது. இதனால் நோயாளிகள் சுசிலா (75), அம்சா (55) மற்றும் கணேசன் (55) ஆகியோர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

3 நோயாளிகளின் பலிக்கு அரசு ஆஸ்பத்திரியில் யு.பி.எஸ். வசதி இல்லாததே காரணம் என்பது தெரியவந்துள்ளது.

மின்சாரம் தடைபட்டால் உடனடியாக மின்சாரம் கிடைக்கும் வகையில் யு.பி.எஸ். பயன்பாடு சதாரணமாகி விட்டது.

சிறிய வணிக நிறுவனங்களில் கூட மின்சாரம் தடைபடாமல் இருக்க யு.பி.எஸ். பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மருத்துவ கல்லூரியுடன் கூடிய அரசு ஆஸ்பத்திரியில் உயிர் காக்கும் பிரிவில் யு.பி.எஸ். வசதி இல்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.


கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் டயாலிசிஸ் வசதி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு பெற போகிறது. ஆனால், யு.பி.எஸ். வசதி செய்யப்படவில்லை.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், 2 முறை நினைவூட்டல் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், கடிதத்தை பெற்ற சுகாதாரத்துறை யு.பி.எஸ். அமைக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

சுகாதாரதுறையின் மெத்தன போக்கே 3 உயிர்கள் பலியாக காரணமாக அமைந்து விட்டது.

Similar News