செய்திகள்

பால் கொள்முதல் விலையை ரூ.40 ஆக உயர்த்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Published On 2017-02-28 10:00 GMT   |   Update On 2017-02-28 10:00 GMT
பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.40 வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி:

அமைச்சர் கமலக் கண்ணன் விவசாயிகளுடன் கலந்தாலோசனை கூட்டத்தை நேற்று நடத்தினார்.

அப்போது அமைச்சர் கமலக்கண்ணனிடம் புதுவை விவசாயிகள் சங்க தலைவர் ரவி, பொதுச் செயலாளர் கீதநாதன் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருந்ததாவது:-

புதுவை அரசு சட்டப் பேரவையில் அறிவித்த கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி, மின்சார வரி ரத்து போன்றவைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயம், விவசாயிகள் மற்றும் கால்நடை, பால் உற்பத்தியாளர்களின் நலன் காத்திட 60 வயது முதிர்ந்த ஆண், பெண் விவசாயிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பென்‌ஷன் வழங்க வேண்டும்.

சாகுபடிக்கு புதிய கடன், வட்டி இல்லாமல் வழங்க வேண்டும். பழைய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையினை அரசு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.40 வழங்க வேண்டும்.

மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்க கூட்டுறவு மற்றும் தனியார் டெப்போவில் பால் ஊற்றுகின்றவர்களுக்கு பாரபட்சமின்றி தகுதி உள்ளவர்களுக்கு விசாரணை அடிப்படையில் விலையில்லா பசு மாடுகள் வழங்க வேண்டும்.

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் விலை அறிவிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News