செய்திகள்

போலி காசோலை கொடுத்து 10 எல்.இ.டி.டி.வி.க்கள் வாங்கி மோசடி: ஆசாமிக்கு வலைவீச்சு

Published On 2017-02-23 14:59 GMT   |   Update On 2017-02-23 14:59 GMT
புதுவையில் போலி காசோலை மூலம் 10 எல்.இ.டி.டி.வி.க்கள் வாங்கி மோசடி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:

புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு டிப்–டாப் ஆசாமி ஒருவர் வந்தார். அவர் தன்னை சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் அப்பாஸ் அலி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் புதுவையில் கல்வி நிறுவனம் நடத்தப்போவதாக கூறி 10 எல்.இ.டி. டி.வி. வாங்கினார். இதற்காக 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு காசோலை கொடுத்ததுடன் வீட்டு முகவரி, செல்போன் நம்பரையும் கொடுத்து விட்டுச் சென்றார்.

அந்த காசோலையை தனியார் ஷோரூம் நிறுவனத்தினர் வங்கியில் கொடுத்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காசோலை கொடுத்தவர் தெரிவித்து இருந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தனியார் ஷோரூம் நிறுவன மேலாளர் பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலி காசோலை கொடுத்து மோசடியாக 10 எல்.இ.டி. டி.வி.களை வாங்கிச்சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்து குற்றவாளியை அடையாளம் காண போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

புதுவையில் மேலும் 4 கடைகளில் இதேபோல் நூதன முறையில் இந்த ஆசாமி மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வெங்கட்டாநகரில் உள்ள சென்னை துரைப்பாக்கம் ஆனந்த நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 28) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கல்வி நிறுவனம் நடத்தப்போவதாக இதே ஆசாமி வாடகைக்குப் பேசி முன்பணம் கொடுத்தார். அவரை நம்பி சாவியை சரவணன் கொடுத்த நிலையில் அந்த கட்டிடத்தில் ஏற்கனவே இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 14 ஏ.சி. எந்திரங்கள் மற்றும் 8 கம்ப்யூட்டர் டேபிள்களை திருடிக்கொண்டு சாவியுடன் தலைமறைவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்தும் பெரியகடை போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News