செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் பணிக்காக மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் பதவி காலம் நீடிப்பு?: தமிழக அரசு ஆலோசனை

Published On 2017-01-29 04:47 GMT   |   Update On 2017-01-29 04:47 GMT
உள்ளாட்சி அமைப்புகளின் மாநில தேர்தல் ஆணையராக உள்ள சீத்தாராமன் பதவிக்காலம் மார்ச் 21-ந்தேதி முடிகிறது. அவருக்கு பதவி நீடிப்பு செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

சென்னை:

உள்ளாட்சி தேர்தல் தேதி விவரத்தை வருகிற 31-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் கமி‌ஷனுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஏப்ரல் மாதத்திற்குள் இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் பள்ளி தேர்வுகள் ஏப்ரல் மாதத்திற்குள் நடை பெறுவதால் வாக்குச் சாவடிகள் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த முடியாத நிலை தேர்தல் கமி‌ஷனுக்கு ஏற்பட்டு உள்ளது.

இதனால் பள்ளி கோடை விடுமுறையில்தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என்று கோர்ட்டில் தேர்தல் கமி‌ஷன் வாதங்களை எடுத்து வைக்க உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் தற்போது தனி அதிகாரிகளின் நிர்வாகத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போது உள்ளாட்சி அமைப்புகளின் மாநில தேர்தல் ஆணையராக உள்ள சீத்தாராமன் பதவிக்காலம் மார்ச் 21-ந்தேதி முடிகிறது. அவருக்கு பதவி நீடிப்பு செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.

இதுபற்றி உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி கடந்த 2011-ல் அமைந்தபோது மாநில தேர்தல் ஆணையராக சோ.அய்யர் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது உள்ளாட்சி தேர்தல் உடனே நடத்தி முடிக்கப்பட்டது.

அவரது பதவி காலம் 2013-ல் முடிந்தபோது மேலும் 2 ஆண்டுக்கு அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் பதவி காலம் முடிந்ததால் புதிய தேர்தல் கமி‌ஷனராக சீத்தாராமன் நியமிக்கப்பட்டார். இவரது பதவி காலம் 2 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டது.

இப்போது சீத்தாராமனின் பதவி காலம் வருகிற மார்ச் 21-ந்தேதி முடிவடைகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முன்னேற்பாடுகளை இதுவரை சீத்தாராமன் கவனித்து வருவதால் இந்த சமயத்தில் புதிய அதிகாரியை நியமித்தால் குளறுபடி ஏற்படும் என அரசு கருதுகிறது.

இதனால் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக சீத்தாராமனின் பதவி காலத்தை மேலும்2 ஆண்டுக்கு நீடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மட்டங்களில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News