செய்திகள்

வெற்றிக்கு பின்னரும் போராட்டத்தை தொடர்வதா?: ராகவா லாரன்ஸ் வேதனை

Published On 2017-01-23 07:22 GMT   |   Update On 2017-01-23 07:22 GMT
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை அவசரப்பட்டு மீண்டும் போராட்ட களத்தில் தொலைத்து விட வேண்டாம் என ஜல்லிக்கட்டு ஆர்வலரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை அவசரப்பட்டு மீண்டும் போராட்ட களத்தில் தொலைத்து விட வேண்டாம் என ஜல்லிக்கட்டு ஆர்வலரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று பகல் 12 மணியளவில் ஓடும் காரில் அமர்ந்தபடி அவர் வீடியோ வடிவில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:-

ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டும் என்ற நமது போராட்டத்தின் பயனாக இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு கிடைத்துள்ளதாக தமிழக சட்டசபையில் இன்று உரையாற்றிய கவர்னர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதை அறிந்து நான் மிகவும் சந்தோஷம் அடைந்துள்ளேன். கடந்த ஒருவார காலமாக மெரினா கடற்கரையில் தொடர்ந்து நாம் நடத்திய போராட்டத்தின் மூலம் நமக்கு நிஜமான வெற்றி கிடைத்து விட்டது. இது, யாருக்குமே புரியவில்லை.

எனவே, மறுபடியும் மறுபடியும் நாம் போராட்ட களத்தில் இறங்க வேண்டாம், நான் தற்போது மெரினா கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். இந்த நாள் நாம் அடைந்துள்ள வெற்றியை சந்தோஷமாக ஆடிப்பாடி கொண்டாட வேண்டிய நாள். மெரினா கடற்கரையில் உள்ள போராட்டக்காரர்கள் கடலுக்குள் இறங்கியும், சாலையில் அமர்ந்தும் போராட வேண்டாம்.

எங்கள் உணர்வுகளை புரிந்துகொண்டு, மதிப்பளித்து ஆளுநர் மூலம் இந்த அவசர சட்டத்தை பிறப்பித்த முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் மோடி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமக்கு கிடைத்தது மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றியை நாம் அனைவரும் இன்றிரவு கொண்டாடப் போகிறோம். அவசரப்பட்டு மீண்டும் போராட்ட களத்தில் தொலைத்து விட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News