செய்திகள்

ஜெயலலிதா பிறந்த நாளில் மரம் நடும் பெருந்திட்டம்

Published On 2017-01-23 06:24 GMT   |   Update On 2017-01-23 06:24 GMT
தமிழ்நாட்டின் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 69-வது பிறந்த நாளான வரும் பிப்ரவரி 24-ந்தேதியன்று மரம் நடும் பெருந்திட்டம் துவங்கப்படும் என்று சட்டசபையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கவர்னர் வித்யாசாகர் ராவ் உரை நிகழ்த்தினார். அதன் விவரம் வருமாறு:-

வார்தா புயல் பாதிப்பு மறுசீரமைப்புப் பணிகளுக்காக 1,972.89 கோடி ரூபாயை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கக் கோரியும், நிரந்தரக் கட்டுமானப் பணிகளுக்காக 20,600.37 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு வழங்கக் கோரியும், முதல்-அமைச்சர் மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனை உடனடியாகப் பரிசீலித்து நிதியுதவி வழங்க வேண்டும்.

சென்னை மற்றும் அதை அடுத்துள்ள மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் நிலங்களிலிருந்த பெரும்பாலான மரங்கள் ‘வார்தா’ புயலால் வேரோடு சாய்க்கப்பட்டும், பாதிப்பிற்கும் உள்ளாகின. அரசு நிலங்களில் மரங்களை நடுவதற்கும் தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மரம் நடுவதை ஊக்கப்படுத்துவதற்கும் ஒரு மாபெரும் பசுமைத்திட்டத்தை இந்த அரசு துவக்க உள்ளது.

மரங்கள் நடுவதை மற்றும் பசுமைப் பரப்பை அதிகரிப்பது போன்றவை தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உள்ளம் கவர்ந்த பணி என்பதால் இந்த மரம் நடும் பெருந்திட்டம் அவர்களின் 69-வது பிறந்த நாளான வரும் 24-ந்தேதி அன்று துவங்கப்படும்.

‘வார்தா’ புயலால் நமது மாநிலம் கடும் காற்றைத் தான் எதிர்கொண்டதே தவிர எதிர்பார்த்த அளவு மழையைப் பெறவில்லை. வடக்கிழக்குப் பருவமழை சராசரி அளவைக் காட்டிலும் 62 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதால், மாநிலம் தற்போது கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மழையின்மை மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறையின் காரணமாக ஏற்பட்ட கடும் பயிரிழப்பு, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்துள்ளது.

குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான தீவனத்திற்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 140 ஆண்டுகளில், மாநில கண்டிராத மிக மோசமான வறட்சி இது என்ற அடிப்படையில், இதனை ‘கடும் வறட்சி’ என்று அறிவித்து, பயிரிழப்பு மற்றும் இதர நிவாரணப் பணிகளுக்கு மாநில அரசு நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 39,565 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசை இந்த அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Similar News