செய்திகள்

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது - கவர்னர் உரையாற்றுகிறார்

Published On 2017-01-23 00:53 GMT   |   Update On 2017-01-23 00:53 GMT
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுகிறார்.
சென்னை:

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை(திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதல் நிகழ்ச்சியாக கவர்னர் உரையாற்றுகிறார்.

இது தொடர்பாக சட்டசபை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக சட்டமன்ற பேரவையின் 

கூட்டத்தை கவர்னர் 23-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார். அன்று சட்டசபையில் காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்துவார்” என்று கூறப்பட்டுள்ளது.

இன்று சட்டசபை நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடும். அதில், சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

நாளை 24-ந் தேதியன்று சட்டசபையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சித் தலைவர்கள், எதிர்கட்சித்தலைவர், முதல்-அமைச்சர், சபாநாயகர் உரையாற்றுவார்கள்.

மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உள்பட மறைந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமி, தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, கர்நாடக இசைக்கலைஞர் பால முரளி கிருஷ்ணா, கியூபா முன்னாள் கவர்னர் பிடல் காஸ்ட்ரோ ஆகியோர் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அதைத்தொடர்ந்து மறைந்தவர்களுக்கு மவுன 
அஞ்சலி செலுத்தப்படும்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் 25-ந் தேதி கொண்டு வரப்பட்டு எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு விடப்படும். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேச சட்டமன்றத்தில் உள்ள எல்லா கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு தரப்படும்.

30-ந் தேதியன்று விவாதம் முடிவுறும் என்றும் அன்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Similar News