செய்திகள்

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு ராமதாஸ் வரவேற்பு

Published On 2017-01-22 03:21 GMT   |   Update On 2017-01-22 03:21 GMT
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக அவசர சட்டத்தை மாநில கவர்னர் பிறப்பித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் எழுந்த எழுச்சியைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதை பா.ம.க. வரவேற்கிறது.

மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம்செய்வதன் மூலமே தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பாதுகாக்க முடியும் என்று தோன்றுகிறது. அதை நிறைவேற்றித்தர மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இம்மாத இறுதியில் தொடங்க இருக்கும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அதற்கான சட்டத்திருத்த முன்வடிவை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

அதேபோல், தமிழர்களின் பாரம்பரியத்திற்கு எதிராகவும், இந்திய நலனுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் பீட்டா அமைப்பை தடை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News