செய்திகள்

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வாட்ஸ்-அப் குழு நடத்தும் மனித சங்கிலி போராட்டம்

Published On 2017-01-10 11:29 GMT   |   Update On 2017-01-10 11:29 GMT
ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி வரும் 12-ந்தேதி காலை 10 மணிக்கு கடற்கரை சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என வாட்ஸ்அப் குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.
புதுச்சேரி:

பொங்கல் விடுமுறையை கட்டாய விடுமுறையிலிருந்து நீக்கிய மத்திய அரசை கண்டித்தும், ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும் தமிழகம், புதுவையில் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுவையில் பல வாட்ஸ்-அப் குழுக்கள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும் இளைஞர்களை ஒன்று திரட்டும் வகையிலும் போராட்டம் நடத்த வேண்டும் என வாட்ஸ்-அப் குழுக்களில் செய்திகள் பரிமாறப்பட்டது.

இதையடுத்து வாட்ஸ்-அப் குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டை நடத்தக்கோரியும், பொங்கல் பொது விடுமுறை என அறிவிக்க வலியுறுத்தியும் மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர்.

வரும் 12-ந்தேதி காலை 10 மணிக்கு கடற்கரை சாலையில் இந்த மனித சங்கிலி போராட்டத்தை நடத்துவது என அந்த குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இந்த குழுக்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ் உணர்வுள்ள அனைவரும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வாட்ஸ்-அப் மூலம் செய்திகளை பரப்பி வருகின்றனர். இன்று பெரும்பாலான வாட்ஸ்-அப் குழுக்களில் இந்த செய்திதான் முக்கியமாக இடம்பெற்றிருந்தது.

அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாராமல் மத்திய அரசுக்கு எதிராக இந்த மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என குழுவின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News