செய்திகள்

குன்னூர் அனைத்து கட்சி ஊர்வலத்தில் மாரடைப்பால் அ.தி.மு.க. தொண்டர் மரணம்

Published On 2016-12-07 11:20 GMT   |   Update On 2016-12-07 11:20 GMT
ஜெயலலிதா மறைவையொட்டி குன்னூரில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற ஊர்வலத்தில் அ.தி.மு.க. தொண்டர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
குன்னூர்:

ஜெயலலிதா மறைவையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் அனைத்து கட்சியினர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், பொது நல அமைப்புகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடந்தது.

குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தொடங்கி ஊர்வலத்தில் அ.தி.மு.க. , தி.மு.க., காங் கிரஸ், தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, பா.ஜனதா, திராவிடர் கழகம், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொது நல அமைப்புகள், குன்னூர் நுகர்வோர் அமைப்புகள், மேல் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தினர், ஆட்டோ, கார், வேன் ஓட்டுனர்கள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் ஊர்வலம் குன்னூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகே முடிவடைந்தது. அங்கு ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அனைத்து கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் குன்னூர் வெலிங்டனில் அனைத்து கட்சிகள் சார்பில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன ஊர்வலம் நடந்தது.

இந்த ஊர்வலத்தில் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் வெல்பர்ட் (வயது 60) என்பவர் கலந்து கொண்டார். ஊர்வலம் முடிந்ததும் திடீரென வெல்பர்ட் மாரடைப்பால் மயங்கி விழுந்து இறந்தார்.

Similar News