செய்திகள்

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம்

Published On 2016-12-07 09:19 GMT   |   Update On 2016-12-07 09:19 GMT
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி கடைபிடிக்கப்படுவதால் புதுவை மாநில காங்கிரஸ் தலைவரை விரைவில் மாற்றம் செய்ய கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் அமைச்சர் நமச்சிவாயம். புதுவை மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த நமச்சிவாயம் மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.

இவர் தலைமையில் காங்கிரஸ் கட்சி 2016 சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் வெற்றியும் பெற்று ஆட்சியும் அமைத்தது. காங்கிரஸ் அமைச்சரவையில் 2-வது அமைச்சராக நமச்சிவாயம் நியமிக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி அமைச்சர் பதவியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலும் தொடர்ந்து நமச்சிவாயம் நீடிக்க முடியாது.

இதனால் புதுவை மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஏற்கனவே தலைவராக இருந்த ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் காந்திராஜ், வல்சராஜ், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருகிறது. இவர்களில் ஒருவர் அகில இந்திய தலைமையால் விரைவில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்படலாம்.

Similar News