செய்திகள்

சென்னை: ஓட்டல்கள் மூடல் - அம்மா உணவகத்தில் பணமில்லாமல் டிபன், சாப்பாடு

Published On 2016-12-06 08:55 GMT   |   Update On 2016-12-06 08:55 GMT
ஜெயலலிதாவின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் சென்னையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அம்மா உணவகத்தில் டிபன், சாப்பாடு இலவசமாக அளிக்கப்படுகிறது.
சென்னை:

ஜெயலலிதாவின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் சென்னை நகரில் கடைகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் இயங்காததால் வெளியூர்களில் இருந்துவரும் பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

நகரின் முக்கிய சாலைகளில் ஆட்டோ ரிக்‌ஷா போக்குவரத்தும் வெகு குறைவாக காணப்படும் நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை செண்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளிடம் சில டிரைவர்கள் அதிகமான கட்டணம் கேட்டு ‘டிமான்ட்’ செய்வதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.

இதற்கிடையே, ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள உணவகங்களும் நகரின் பிரதான பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள மக்கள் உணவு கிடைக்காமல் திண்டாட நேரிட்டுள்ளது.

குறிப்பாக, எழும்பூர் பகுதியில் உள்ள அனைத்து உணவகங்களும் மூடப்பட்டுள்ளதால் மாற்று ரெயில்களுக்காக இங்கு காத்து கிடப்பவர்கள் பசியால் தவிக்க நேர்வதை தடுக்கும் வகையில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் வடக்கு வாயில் பகுதியில் (தினத்தந்தி அலுவலகம் எதிரே) உள்ள அம்மா உணவகம் இன்றும் இயங்கி வருகிறது.

இது பசியால் வாடும் பலருக்கு பாலைவனச் சோலையாக காணப்படும் நிலையில், இன்று காலையில் இருந்து இந்த அம்மா உணவகத்தில் காலை டிபன், மதிய உணவான எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவை பணம் ஏதும் பெறாமல் இலவசமாகவே அளிக்கப்பட்டு வருகிறது.

‘அன்னமிட்ட அன்னப்பூரணியே!, உங்களுடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்’ என்ற வாசகம் எழுதப்பட்ட அட்டையின் பின்னணியுடன் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து, ஊதுவத்தி ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இங்கு தினந்தோறும் எவ்வளவு இட்லி, பொங்கல், சாதம் வகைகள் சமைக்கப்படுமோ? அதே அளவில் இன்றும் தயாரிக்கப்பட்டதாகவும், தங்களது உயரதிகாரிகளின் உத்தரவுப்படி காலை டிபன், மதிய உணவு ஆகியவை இன்று ஒருநாள் மட்டும் பணமின்றி வழங்கப்படுவதாகவும் இங்கு பணியாற்றும் மகளிர் கூறுகின்றனர்.

Similar News