செய்திகள்

சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட கண்டெய்னர் லாரியில் பணமா?: போலீசார் விசாரணை

Published On 2016-12-04 08:46 GMT   |   Update On 2016-12-04 08:46 GMT
கொருக்குப்பேட்டையில் சாலையோரத்தில் கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அதில் டிரைவர் இல்லை. கண்டெய்னர் லாரியின் உள்ளே என்ன இருக்கிறது என்று மாயமான டிரைவர் சிக்கினால் தான் மேலும் விவரம் தெரிய வரும்.
ராயபுரம்:

கொருக்குப்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலையில் இன்று காலை நீண்ட நேரம் கண்டெய்னர் லாரி நின்றது. அதில் டிரைவர் இல்லை.

இதையடுத்து அந்த கண்டெய்னர் லாரியில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக தகவல் பரவியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் கொருக்குப்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கண்டெய்னர் லாரியில் மகாராஷ்டிரா மாநில பதிவு எண் இருந்தது.

இதே லாரி இன்று அதிகாலை தண்டையார் பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே நிறுத்தப்பட்டு இருக்கிறது. போக்குவரத்துக்கு பாதிப்பாக இருந்ததால் அந்த லாரியை அங்கிருந்த போலீசார் எடுக்க சொல்லி இருக்கிறார்கள்.

இதன் பின்னரே லாரியை கொருக்குப்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலையில் நிறுத்தி விட்டு டிரைவர் மாயமாகி உள்ளார்.

கண்டெய்னர் லாரியின் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. மாயமான டிரைவர் சிக்கினால் தான் இது பற்றிய விவரம் தெரிய வரும். இதைத் தொடர்ந்து மாயமான லாரி டிரைவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News