செய்திகள்

குமரியில் ஏ.டி.எம். மையங்கள் இன்றும் திறக்கப்படவில்லை

Published On 2016-11-11 12:29 GMT   |   Update On 2016-11-11 12:29 GMT
குமரி மாவட்டத்தில் சுமார் 1,400 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் இன்று திறக்கப்படவில்லை.

நாகர்கோவில்:

1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் வங்கிகளின் ஏ.டி.எம். எந்திரங்களில் ஏற்கனவே நிரப்பப்பட்ட நோட்டுகளை மாற்ற பாங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதற்காக அனைத்து வங்கி ஏ.டி.எம்.களும் 2 நாட்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நாட்களில் பழைய ரூபாய் நோட்டுக்கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் வைக்கப்படும் என்று கூறப்பட்டது.

இன்று காலை முதல் அனைத்து ஏ.டி.எம்.களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தால் இன்று அதிகாலையிலேயே ஏராளமான மக்கள் ஏ.டி.எம். மையங்களுக்கு படை எடுத்தனர்.

குமரி மாவட்டத்தில் சுமார் 1,400 ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் இன்று திறக்கப்படவில்லை.

இதனால் பணம் எடுக்க சென்றவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் வங்கிகளோடு இணைந்திருக்கும் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பார்த்தனர். அங்கும் ஏ.டி.எம். மையங்கள் மூடியே கிடந்தன.

இதுபற்றி வங்கி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் புதிய ரூ.2000 பணத்தை வைக்கவேண்டுமானால் எந்திரத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். அந்த பணி இன்னும் முழுமையாக முடியவில்லை.

எனவே ஏ.டி.எம். மையங்களில் இப்போதைக்கு ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுக்களை மட்டுமே வைத்து வருகிறோம். அதற்கும் எந்திரத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். இதனால்தான் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட தாமதமாகிறது. இன்று பிற்பகலுக்குள் இந்த பணி முடிந்து விடும்.

அதன் பிறகு வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகளில் நேற்று பழைய நோட்டுக்களை மாற்ற முடியாதவர்கள் இன்று காலை ஏ.டி.எம். மையங்களில் ஏற்கனவே கணக்கில் இருக்கும் பணத்தையாவது எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்தனர்.

இன்று ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடி யாத நிலை ஏற்பட்டதால் அவர்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். ஒரு சில ஏ.டி.எம். மையங்கள் திறந்திருந்தன. அவற்றில் கார்டை செலுத்தி பார்த்தால் பணம் இருப்பு இல்லை எனபதில் வந்தது. இதனாலும் மக்கள் அவதி அடைந்தனர்.

Similar News