செய்திகள்

கோர்ட் உத்தரவிட்ட பிறகே ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை: நீதிபதிகள் கண்டனம்

Published On 2016-11-04 10:36 GMT   |   Update On 2016-11-04 10:36 GMT
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கோர்ட்டு உத்தரவிட்ட பிறகுதான் அரசு நடவடிக்கை மேற்கொண்டதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மதுரை:

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு, தானாக முன்வந்து வழக்கை தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது கடந்த ஆண்டு வசூலித்த கட்டணத்தையே ஆம்னி பஸ்கள் வசூலிக்க வேண்டும் என்று உத்தர விட்டது.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கூடுதல் கட்டணம் வசூல் செய்த ஆம்னி பஸ்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் விதிமுறை மீறிய 25 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.34 லட்சத்து 15 ஆயிரத்து 600 அபராத தொகை வசூலிக்கப்பட்டது. 1136 பயணிகளிடம் கூடுதலாக வசூலித்த தொகையை திருப்பி வழங்கி உள்ளோம் என்று தெரிவித்தார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கோர்ட்டு உத்தரவிட்ட பிறகுதான் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கு முன்பு அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளது என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர் வருகிற 11-ந் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் அன்றைய தினம், போக்கு வரத்துத்துறை ஆணையர் நேரில் ஆஜராகவும் உத்தர விட்டனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது இதில் தொடர்புடைய ஆம்னி பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.

Similar News