செய்திகள்

டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்: தந்தை ஆவேசம்

Published On 2016-11-03 11:15 GMT   |   Update On 2016-11-03 11:15 GMT
பிரசவத்தின் போது கவனகுறைவாக இருந்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
திருத்தணி:

திருத்தணியை அடுத்த கிருஷ்ணசமுத்திரம் காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பிரியா. கர்ப்பிணியாக இருந்த பிரியாவை பிரசவத்துக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவருக்கு கடந்த 20-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தைக்கு இரண்டு கால் முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்க்குமாறும் டாக்டர்கள் கூறினர்.

எழும்பூர் ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், பிரசவத்தின் போது கீழே விழுந்ததால் குழந்தையின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறினர். இதையடுத்து குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். கால்களில் கட்டு போட்டு உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ரமேஷ் திருத்தணி போலீசில் புகார் செய்தார். அதில், பிரசவத்தின் போது டாக்டர்களின் கவனக்குறைவால் எனது குழந்தையின் கால்களில் முறிவு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதுபற்றி ரமேஷ் கூறுகையில், பிரசவத்தின் போது கவனகுறைவாக இருந்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய முடிவு செய்து உள்ளேன். டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News