செய்திகள்

வேட்புமனு படிவத்தில் வேட்பாளரின் புகைப்படம் ஒட்ட வேண்டும்: தேர்தல் ஆணையம்

Published On 2016-10-25 13:42 GMT   |   Update On 2016-10-25 13:42 GMT
தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனுவில் வேட்பாளரின் புகைப்படம் ஒட்டும் வகையில் படிவத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 17-ந்தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதலே 3 தொகுதிகளிலும் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், மனு தாக்கலுக்கு ஏற்கனவே உள்ள விதிமுறைகளுடன், வேட்பாளரின் புகைப்படம் மற்றும் குடியுரிமை உறுதிமொழி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

இந்தியத் தேர்தல் ஆணையமானது, தற்போது வேட்புமனு சமர்ப்பிப்பதற்கான படிவம் 2ஏ (பாராளுமன்றத் தேர்தலுக்குரியது) மற்றும் படிவம் 2பி (சட்டப்பேரவைத் தேர்தலுக்குரியது) ஆகியவற்றில் வேட்பாளரின் புகைப்படத்தை ஒட்டுவதற்கும், தனது குடியுரிமை குறித்த உறுதிமொழியான அதாவது தான் ஒரு இந்தியக் குடிமகன் எனவும் வேறு எந்த நாட்டின் குடியுரிமையையும் பெறவில்லை எனவும் உறுதிமொழியை அளிப்பதற்கான திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

மேற்படி திருத்தம் செய்யப்பட்ட படிவங்கள் அச்சிடப்பட்டு உரிய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருத்தம் செய்யப்பட்ட புதிய படிவத்தில் வேட்பாளர்களின் வேட்புமனுவைப் பெற வேண்டும் எனத் தற்போது தேர்தல் நடக்கவுள்ள சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News