செய்திகள்

விழுப்புரம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு

Published On 2016-10-23 17:22 GMT   |   Update On 2016-10-23 17:22 GMT
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்:

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஏ.கே.அகர்வால் நேற்று காலை விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு சிறப்பு ரெயில் மூலம் வந்தார். அவர் ரெயில் நிலைய ஒவ்வொரு நடைமேடைக்கும் சென்று பயணிகளுக்கான தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி சரியாக உள்ளனவா? என ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து பயணிகள் தங்கும் அறையை பார்வையிட்ட அவர், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். மேலும் ரெயில் நிலைய சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த அவர் உடனே அவற்றை அகற்றும்படியும், ரெயில் நிலையத்தை சுகாதாரமாக வைத்திருக்குமாறும் ரெயில்வே நிலைய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

அதன் பிறகு 6–வது நடைமேடையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியை பார்வையிட்ட கோட்ட மேலாளர் அகர்வால், பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகள் தங்கும் அறை நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.

Similar News