செய்திகள்

சிவகாசி பட்டாசு விபத்துகளை தடுக்காதது ஏன்?: அரசு அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கண்டனம்

Published On 2016-10-22 03:03 GMT   |   Update On 2016-10-22 03:03 GMT
சிவகாசி பட்டாசு விபத்துகளை தடுக்காததற்காக, அரசு அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுரை:


சிவகாசியில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 8 பேர் பலியாகினர். இதுதொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அதன் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து (சூமோட்டோ) இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்டது.

இதனையடுத்து நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் வழக்கு தொடர்பாக விருதுநகர் மாவட்ட வருவாய் அதிகாரி ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உணவு இடைவேளைக்கு பின்னர் ஒத்திவைத்தனர். அதன்படி பிற்பகலில் நடந்த விசாரணையில், விருதுநகர் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துக்குமரன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “பட்டாசு ஆலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யாமலேயே அதிகாரிகள் லைசென்சை புதுப்பித்து கொடுக்கிறார்கள். கலெக்டரின் தடையில்லா சான்றிதழ் பெறாமலேயே விபத்து நடந்த கடையின் லைசென்சு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் தான் இதே பகுதியில் பட்டாசு விபத்து ஏற்பட்டு சிலர் இறந்துள்ளனர். அதன் பிறகும் பட்டாசு ஆலைகள், குடோன்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யாமல் இருந்துள்ளனர்.

விதிமீறல் நடப்பதற்கு வாய்ப்பு இருந்தும் அதை அதிகாரிகள் கண்காணிக்காமல் விட்டதால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ளது” என்றனர்.

மேலும், “விபத்துக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் பட்டாசுகளை வேனில் இருந்து இறக்கி கடைக்குள் கொண்டு சென்ற 3 அப்பாவி கூலித்தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது” என்றனர்.

மேலும், நீதிபதிகள், “விபத்தில் காயம் அடைந்தவர்கள் தனியார் ஆஸ்பத்திரியை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது ஏன்? அரசு ஆஸ்பத்திரியில் குறைபாடுகள் உள்ளன என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது” என்றனர்.

மேலும், “மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வது அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் வேலை தான். ஆனால், அதை நிறைவேற்றுவதில் கோர்ட்டு தலையிட வேண்டி இருப்பது வேதனையளிக்கிறது” என்றனர்.

தொடர்ந்து அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த இந்த வழக்கில் பட்டாசு நிறுவன உரிமையாளர், மருத்துவ பரிசோதனை மைய உரிமையாளர் ஆகியோரும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். சிவகாசியில் ஏற்பட்ட பட்டாசு விபத்து தொடர்பாக வெடிபொருள் கட்டுப்பாட்டு இணை மற்றும் துணை அதிகாரிகள், விருதுநகர் மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்டோர் விபத்துக்கு காரணமான விதிமீறல் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Similar News