செய்திகள்

பா.ஜ.க. பிரமுகர் கொலை: குயிலாப்பாளையத்தில் 2-வது நாளாக கடை அடைப்பு

Published On 2016-10-05 09:24 GMT   |   Update On 2016-10-05 09:24 GMT
பாரதீய ஜனதா பிரமுகர் கொலை சம்பவம் காரணமாக குயிலாப்பாளையத்தில் இன்று 2-வது நாளாக பதட்டம் நீடிக்கிறது.
சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெனா என்ற ஜெனார்த்தனன் (வயது 31).
இவர் பிரபல ரவுடியான குயிலாப்பாளையத்தை சேர்ந்த மர்டர் மணிகண்டனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். மேலும் பாரதீய ஜனதா கட்சியின் விழுப்புரம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவராக இருந்து வந்தார்.

நேற்று காலை ஒரு வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு ஜெனா தனது நண்பரான புதுவை ஆட்டுப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

விழுப்புரம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் ஜெனாவை கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டது. ரவுடிகள் மோதலால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவம் காரணமாக குயிலாப்பாளையத்தில் நேற்று பதட்டம் உருவானது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

இன்று 2-வது நாளாக குயிலாப்பாளையத்தில் பதட்டம் நீடிக்கிறது. உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று பிற்பகல் ஜெனாவின் உடல் குயிலாப்பாளையத்துக்கு கொண்டு வருவதையொட்டி அங்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானவேலு தலைமையில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் உள்பட 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News