செய்திகள்

வாடிக்கையாளர் கணக்கில் ரூ.2.43 கோடி மோசடி: வங்கி பெண் ஊழியர் கைது

Published On 2016-09-24 03:37 GMT   |   Update On 2016-09-24 03:37 GMT
சென்னையில் வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி பணத்தை சுருட்டியதாக வங்கி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை:

சென்னை எம்.ஆர்.சி.நகர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை மேலாளர் மோகன் (வயது 57). சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்கள் வங்கி கிளையில் ஊழியராக வேலை பார்க்கும் ராஜி (54) என்பவர், வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி பணத்தை கையாடல் செய்துவிட்டார். வாடிக்கையாளரின் கையெழுத்தை போலியாக போட்டு இந்த மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார். இதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புகார் கூறப்பட்ட ராஜி நேற்று கைது செய்யப்பட்டார். அவர் பி.எஸ்சி. பட்டதாரி. அவரது கணவர், வங்கி மேலாளராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News