செய்திகள்

காவிரி தண்ணீரை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்: கோவில்பட்டியில் வைகோ பேச்சு

Published On 2016-09-21 04:53 GMT   |   Update On 2016-09-21 04:53 GMT
தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை பெற்று தந்ததற்காக ஜெயலலிதாவை மனதார பாராட்டுவதாக கோவில்பட்டியில் ம.தி.மு.க. ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் வைகோ பேசினார்.
கோவில்பட்டி:

கோவில்பட்டியில் ம.தி.மு.க. ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி, கட்சி நிர்வாகிகளிடம் உள்ளாட்சி தேர்தல் குறித்து கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் உள்ளாட்சி தேர்தலில் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து வெற்றிபெற ஏற்பாடு செய்து வருகின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர்களே தலைவர்களை தேர்ந்து எடுக்கும் முறையை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு ஜனநாயக முறைப்படி பொதுமக்கள்தான் தலைவர்களை நேரடியாக தேர்ந்து எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதனை மாற்றினார்.

தற்போது அவரே மீண்டும் தி.முக. தலைவர் கருணாநிதி பின்பற்றிய முறைப்படி கவுன்சிலர்களே தலைவர்களை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு என்ன காரணம்? என்று தெரியவில்லை. தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் எதிலும் வேறுபாடு கிடையாது.

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை பெற்று தந்ததற்காகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக நான் பாத யாத்திரை சென்று உள்ளேன். பல்வேறு போராட்டங்களையும் நடத்தி உள்ளேன்.

காவிரி தண்ணீரை தரமறுத்து, கர்நாடக மாநிலத்தில் கன்னடர்கள் தமிழர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் தமிழகத்தில் கர்நாடக மக்களுக்கு எதிராக எந்தவித வன்முறையும் நிகழவில்லை. அதனால்தான் சுப்ரீம் கோர்ட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு உள்ளது. ஆனாலும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதற்கு தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

அணைகளை அந்தந்த மாநில அரசுகளே பாதுகாக்க வேண்டும் என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர ஏற்பாடு செய்கிறது. இதனை தடுக்க வேண்டும்.

இவ்வாறு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

Similar News