செய்திகள்
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த யானையை மீட்ட காட்சி.

பெரிய நாயக்கன்பாளையம் அருகே 10 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 4 வயது குட்டி யானை மீட்பு

Published On 2016-09-09 11:17 GMT   |   Update On 2016-09-09 11:17 GMT
பெரிய நாயக்கன்பாளையம் அருகே 10 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 4 வயது குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கவுண்டம்பளையம்:

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராயர் ஊத்துக்குழி ரோஸ் கார்டன் பகுதி உள்ளது.

இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக 10 அடி ஆழமுள்ள தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக குட்டி யானைகளுடன் கூடிய 9 காட்டு யானை கூட்டம் வந்தது.

தொட்டியில் தண்ணீர் குறைவாக இருந்தது. அப்போது 4 வயது மதிக்கத்தக்க குட்டி ஆண் யானை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது.

தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானையை மீட்க யானைகள் கூட்டம் போராடியது. ஆனால் மீட்க முடியாமல் போனதால் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் சென்றன.

இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வன அலுவலர் பெரியசாமி, டாக்டர். மனோகரன், ரேஞ்சர் பழனி ராஜா உள்பட வன ஊழியர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் தண்ணீர் தொட்டியின் கரையை உடைத்தனர். பின்னர் 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு குட்டியானை தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறி காட்டுக்குள் சென்றது.

Similar News