செய்திகள்

பாரிமுனையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி 5 பேர் படுகாயம் - ரெயில்வே ஊழியர் கைது

Published On 2016-08-09 12:03 GMT   |   Update On 2016-08-09 12:03 GMT
பாரிமுனையில் தறிகெட்டு ஓடிய கார் மோதி பெண் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். காரை ஓட்டிய ரெயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் சேகர் (55). எழும்பூர் ரெயில் நிலையத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பிரபலமான ஓட்டலுக்கு நண்பர் ஒருவரை பார்க்க காரில் சென்றார். பின்னர் 8 மணி அளவில் ஓட்டலை விட்டு வெளியில் வந்த அவர் தனது காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை முதலில் இடித்து தள்ளிய கார், அரண்மனைக்காரன் தெருவில் தாறுமாறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அந்த கார் நடந்து சென்றவர்களையும் இடித்து தள்ளியது.

இதில் அபேஸ் பஞ்சாலி என்பவரின் காலில் முறிவு ஏற்பட்டது. ஜெயகுமார், மோகன், பாலசுப்பிரமணி மற்றும் பூ வியாபாரம் செய்து வந்த அலமேலு ஆகியோரும் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அபேஸ் பஞ்சாலி மட்டும் மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொத்தவால்சாவடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விரைந்து சென்று காரை மீட்டு விசாரணை நடத்தினார். தாறுமாறாக ஓடிய கார் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகில் மோதி நின்றது. வேகமாக காரை ஓட்டிய டிரைவர் சேகர் கைது செய்யப்பட்டார்.

Similar News