செய்திகள்

சேலம் வழியே பெங்களூருக்கு கடத்தி சென்ற 8மணல் லாரிகள் சிறை பிடிப்பு

Published On 2016-08-09 09:51 GMT   |   Update On 2016-08-09 09:51 GMT
சேலம் வழியே பெங்களூருக்கு கடத்தி சென்ற 8மணல் லாரிகளை மணல் லாரி சங்க நிர்வாகிகள் சிறை பிடித்தனர்.

சேலம்:

சேலம் வழிவே கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு மணல் லாரிகளில் கடத்தப்படுவதாகவும், இந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சேலம் சீல்நாய்க்கன்பட்டி மணல், லாரி சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். இதன் மீது அதிகாரிகளும் கண்காணித்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சேலம் சீல்நாய்க்கன்பட்டி பை-பாஸ் வழியே 8 மணல் லாரிகள் வரிசையாக பெங்களூருக்கு சென்றது. இதை அறிந்த சேலம் சீல்நாய்க்கன்பட்டி மணல் லாரி சங்க நிர்வாகிகள் மதி என்கிற முருசேகன், பழனிசாமி மற்றும் உறுப்பினர்கள் இந்த 8 லாரிகளையும் மடக்கி நிறுத்தி சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த சேலம் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். பின்னர் இந்த 8லாரிகளும் கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும், போலீசாரும் விசாரித்து வருகிறார்கள். இது குறித்து சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:-

சேலம் வழியே வெளி மாநிலங்களுக்கு மணல் லாரிகளில் கடத்தி செல்லப்படுகிறது. நாங்கள் இது பற்றி பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று அதிகாலை சேலம் வழியே கடத்தி சென்ற 8 மணல் லாரிகளை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்து இருக்கிறோம். அரசு 2 யூனிட் மணல் எடுத்து செல்லத்தான் அனுமதி கொடுத்து உள்ளது. ஆனால் இந்த லாரிகளில் 8யூனிட் மணல் எடுத்து சென்றுள்ளனர். இதனால் தான் நாங்கள் லாரிகளை மடக்கி நிறுத்தினோம். இதுபோல் தினமும் ஏராளமான லாரிகள் மணல் ஏற்றி செல்கிறது. இந்த லாரிகளை கண்காணித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News