செய்திகள்

போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கியதால் என்ஜினீயர் தற்கொலை

Published On 2016-08-08 06:49 GMT   |   Update On 2016-08-08 06:49 GMT
போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கியதால் வி‌ஷம் குடித்த என்ஜினீயர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஏ.எஸ்.பி. தலைமையில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சேவாம் பாளையத்தை சேர்ந்தவர் முனியப்ப கவுண்டர், விசைத்தறி தொழிலாளி.

இவரது மகன் பிரபாகரன் (வயது 27). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்தார்.

இந்த நிலையில் பிரபாகரன் நேற்று முன்தினம் தனது நண்பர் அன்பழகன் பிறந்த நாளையொட்டி அந்த பகுதியி ல் உள்ள பேக்கரிக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு 2 மோட்டார் சைக்கிள்களில் நண்பர்கள் 3 பேருடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

கல்பாரப்பட்டி அருகே வந்தபோது ஜீப்பில் வந்த ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

ஓட்டுனர் உரிமம் இல்லாதது, அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியது ஆகிய குற்றத்திற்காக பிரபாகரனிடம் இருந்து ரூ.900 அபராதமாக தண்டபாணி வசூலித்தார். இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் பிரபாகரனை போலீஸ் இன்ஸ்பெக்டர் தண்டபாணி தாக்கியதாக கூறப்படுகிறது.

நடுரோட்டில் தன்னை தாக்கி அவமானப்படுத்தி விட்டாரே என்று புலம்பிய படி பிரபாகரன் அங்கிருந்து சென்றார். பின்னர் இரவில் வீட்டில் பிரபாகரன் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அரியானூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரபாகரன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பிரபாகரன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் 10 பேர் இருக்கும் பொது இடத்தில் நான் அடி வாங்கியதை என்னால் ஏற்றுக்கொள்ள மனமில்லை.

அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு மகனாக பிறப்பேன். என்னை நினைத்து கஷ்டப்படாதீர்கள், அந்த இன்ஸ்பெக்டரை சும்மா வீடாதீர்கள் என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், ஏ.எஸ்.பி. சுர்தீஷ்குமார் தலைமையில் ஒரு குழு அமைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து பிரபாகரன் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவ இடத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தாக்கப்பட்ட பிரபாகரனி டம் ஏ.எஸ்.பி. சுர்தீஷ்குமார் விசாரணை நடத்த உள்ளார்.

விசாரணை முடிவில் அறிக்கையாக தயார் செய்து போலீஸ் சூப்பிரண்டிடம் அவர் சமர்ப்பிப்பார். அதில் இன்ஸ்பெக்டர் தண்டபாணி மீது தவறு இருப்பது தெரிய வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Similar News