செய்திகள்
துரைமுருகன்

புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு

Update: 2021-05-07 07:10 GMT
நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் (வயது 76) கே.வி.குப்பம் தொகுதி காங்குப்பம் கிராமத்தில் பிறந்தவர்.
சென்னை:

தமிழகத்தில் இன்று பொறுப்பு ஏற்று உள்ள புதிய அமைச்சர்களின் வாழ்க்கை குறிப்பு வருமாறு:-

துரைமுருகன்

நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் (வயது 76) கே.வி.குப்பம் தொகுதி காங்குப்பம் கிராமத்தில் பிறந்தவர். எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும், பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலை துறை, கைத்தறித்துறை, சட்டம் மற்றும் சிறைத்துறை மற்றும் வனத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார்.

காட்பாடி தொகுதியில் களம் கண்டு தொடர்ந்து 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய மனைவி சாந்தகுமாரி. மகன் கதிர்ஆனந்த், வேலுர் எம்.பி.யாக உள்ளார்.

கே.என்.நேருதமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான கே.என்.நேருவுக்கு வயது 69. தி.மு.க. முதன்மை செயலாளராக உள்ளார். 1989 தேர்தலில் லால்குடியில் போட்டியிட்ட நேரு பெற்ற வெற்றியின் மூலம் பால்வளம், மின்சாரம், தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார்.

1996 தேர்தலிலும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கருணாநிதி அமைச்சரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2006-ம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றினார். இவரது மனைவி பெயர் சாந்தா, ஹேமா, ஆர்த்தி ஆகிய 2 மகள்களும், அருண் என்ற மகனும் உள்ளனர்.

இ.பெரியசாமி

கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற இ.பெரியசாமி (68) திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்தவர். பி.ஏ., பி.ஜி.எல். படித்துள்ளார். தி.மு.க.வின் மாநில துணை பொதுச்செயலாளராக இருக்கிறார்.

கடந்த 1989-ம் ஆண்டு ஆத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றார். அதன்பின்னர் 1996, 2006, 2011, 2016, 2021 என 6 முறை ஆத்தூர் தொகுதியில் வெற்றிவாகை சூடியிருக்கிறார். இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தார். மேலும் தி.மு.க ஆட்சியில் 1996 முதல் 2001 வரை ஊரக தொழில் மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராகவும், 2006 முதல் 2011 வரை வருவாய், வீட்டுவசதி மற்றும் சட்டத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். தற்போது 3-வது முறையாக அமைச்சராகி இருக்கிறார்.க.பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சரான க.பொன்முடி (71) திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தி.மு.க. துணை பொதுச்செயலாளராக உள்ள இவர், விழுப்புரம் கிழக்கு சண்முகபுரத்தில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி விசாலாட்சி. இவருக்கு டாக்டர் பொன்.கவுதமசிகாமணி, டாக்டர் அசோக்சிகாமணி என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் பொன்.கவுதமசிகாமணி கள்ளக்குறிச்சி எம்.பி.யாக உள்ளார்.

இதுவரை சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் 6 முறை போட்டியிட்டு 4 முறையும், திருக்கோவிலூர் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு 2 முறையும் வெற்றி பெற்றுள்ளார்.

எ.வ.வேலு

பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலு (வயது 71) திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். தண்டராம்பட்டு தாலுகா சே.கூடலூர் இவரது சொந்த ஊராகும். எ.வ.வேலு எம்.ஏ. படித்துள்ளார். கட்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளராகவும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

மேலும் 1984, 2001, 2006, 2011, 2016-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். மேலும் 2006 முதல் 2011 வரை உணவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து உள்ளார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வயது 64). கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றவர். குறிஞ்சிபாடி தொகுதியில் 5 முறை வெற்றி கண்டவர். 1996-ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்.

இவருடைய மனைவி செந்தமிழ்செல்வி, மகன் கதிரவன், மகள்கள் டாக்டர் கிரு‌‌ஷ்ணபிரியா, கண்மணி. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் முட்டம்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (வயது 72) விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆவார்.

இவர் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார்.

தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தங்கம் தென்னரசு (54) தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

என்ஜினீயரான இவரது சொந்த ஊர் மல்லாங்கிணறு ஆகும். விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

ஏற்கனவே 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர். கடந்த 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இவர், தற்போது 5-வது முறையாக வெற்றி பெற்று, இம்முறை தொழில்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளார்.

எஸ்.ரகுபதி

சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமயம் தொகுதி எம்.எல்.ஏ.வான எஸ்.ரகுபதிக்கு வயது 70 ஆகிறது. பி.எஸ்சி, பி.எல். முடித்துள்ள இவர் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

மத்திய, மாநில அரசுகளில் மந்திரியாகவும் இருந்துள்ளார். கல்வியாளர். இவருக்கு சரோஜா என்கிற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சு.முத்துசாமி

வீட்டு வசதித்துறை அமைச்சரான சு.முத்துசாமி (வயது 72) ஈரோடு மேற்கு தொகுதியில் களம் கண்டு வாகை சூடியவர். இவர் எம்.ஏ. பட்டதாரி ஆவார். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. தொடங்கியபோது சு.முத்துசாமி அ.தி.மு.க.வில் இணைந்தார். 1977-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டார். முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் ஆனார். மிகக்குறைந்த வயதில் அமைச்சர் ஆன சு.முத்துசாமி ஈரோட்டுக்கு பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை கொண்டு வந்தார். தொடர்ந்து 1980, 1984, 1991 ஆகிய பொதுத்தேர்தல்களிலும் போட்டியிட்டு வென்றார். அமைச்சராகவும் இருந்தார்.

கடந்த 2010-ம் ஆண்டு அ.தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வை விட்டு விலகி தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற கே.ஆர்.பெரியகருப்பன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா அரளிக்கோட்டையை சேர்ந்தவர். பிகாம்., பி.எல். படித்தவர். இவரது மனைவி பிரேமா, மகன் டாக்டர் கோகுல் கிருஷ்ணன். தொடர்ந்து 19 ஆண்டுகளாக மாவட்ட செயலாளர் என பொறுப்புகள் வகித்துள்ளார்.

தா.மோ.அன்பரசன்

ஊரக தொழில் துறை அமைச்சரான தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் 1960-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந் தேதி பிறந்தார். பியூசி வரை படித்து உள்ளார். 2000-ம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார்.

2006, 2016-ம் ஆண்டு ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 3-வது முறையாக ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகி உள்ளார்.

ஏற்கனவே 2006-ம் ஆண்டு தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சராக இருந்தார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், தமிழ்மாறன் என்ற மகனும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.

மு.பெ.சாமிநாதன்

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான மு.பெ.சாமிநாதன் (வயது 56) காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவர். இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள முத்தூர். இவர் பி.ஏ. படித்துள்ளார். விவசாயம் செய்து வருகிறார்.

1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் வெள்ளகோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். 2006-ம் ஆண்டு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆனார்.

பெ.கீதாஜீவன்

சமூகநலத்துறை அமைச்சரான பெ.கீதாஜீவன் (வயது 51) எம்.காம்., பி.எட். பட்டதாரி. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராகவும், மாநில மகளிர் அணி துணை செயலாளராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

ஏற்கனவே இருமுறை சட்டமன்ற உறுப்பினராக வென்ற கீதாஜீவன் சமூக நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கீதாஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப் ராஜேந்திரன். இவர்களுக்கு மகிழ்ஜான் சந்தோஷ் என்ற மகனும், ஜீனா எபி சுந்தரி என்ற மகளும் உள்ளனர்.

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

மீன்வளத்துறை அமைச்சரான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (68) உடன்குடி அருகே தண்டுபத்து கிராமத்தைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் அ.தி.மு.க.வில் இருந்தார். கடந்த 2001-ம் ஆண்டு திருச்செந்தூர் தொகுதியில் வென்ற இவர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரானார்.

தொடர்ந்து 2006-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வென்ற அவர் பின்னர் தி.மு.க.வில் இணைந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2009-ம் ஆண்டு இடைத்தேர்தல், 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் தி.மு.க. சார்பில் தொடர்ச்சியாக போட்டியிட்டு வென்றுள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக உள்ளார். இவருக்கு ஜெயகாந்தி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

கா.ராமச்சந்திரன்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற உறுப்பினரான கா.ராமச்சந்திரன்(வயது 57), வனத்துறை அமைச்சரானார். கடந்த 2006-ம் ஆண்டு கூடலூர் தொகுதியில் வெற்றி பெற்று கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன்பின்னர் 2011-ம் ஆண்டு குன்னூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்னர் 2015-ம் ஆண்டு வரை நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளராக பதவி வகித்தார். இளம் படுகர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார்.

ராஜகண்ணப்பன்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற ராஜகண்ணப்பன் போக்குவரத்து துறை அமைச்சரானார். பி.எஸ்சி., பி.எல். படித்தவர்.

சிவகங்கையில் வக்கீலாக பணிபுரிந்துள்ளார். 1991-ல் ஜெயலலிதா அமைச்சரவையில் 3 துறைகளின் அமைச்சராக பதவி வகித்தவர். 2000-ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை தொடங்கினார்.

பின்னர் 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்து இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் அ.தி. மு.க.வில் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் ப.சிதம்பரத்தை எதிர்த்து சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவர் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்.

அர.சக்கரபாணி

உணவுத்துறை அமைச்சராகி இருக்கும் அர.சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் காளியப்பக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு 60 வயது ஆகிறது. பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ளார். இவருடைய மனைவி பெயர் ராஜலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.வி.செந்தில்பாலாஜி

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான வி.செந்தில்பாலாஜிக்கு வயது 46. இவரது சொந்த ஊர் கரூர் ராமேஸ்வரப்பட்டி. 1996-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். பிறகு அ.தி.மு.க.வில் இணைந்த அவர் 2006-ம் ஆண்டு கரூர் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் கரூரில் போட்டியிட்டு போக்குவரத்துத்துறை அமைச்சரானார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க.வில் இணைந்த அவர் 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராகவும் உள்ளார்.

ஆர்.காந்தி

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 4-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.காந்தி. கைத்தறித்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றார்.

75 வயதான இவர் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

மா.சுப்பிரமணியன்

சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன் வாணியம்பாடி அருகில் ஒரு சிறிய கிராமத்தில் 1959-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி பிறந்தார். சட்டப்படிப்பு முடித்தவர். தற்போது சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கிறார்.

2006-2011-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி மேயராகவும் பொறுப்பு வகித்தார். 2016-ம் ஆண்டு சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தற்போது மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

மா.சுப்பிரமணியனுக்கு காஞ்சனா என்ற மனைவியும், இளஞ்செழியன் என்ற மகனும் இருக்கிறார்கள். இளஞ்செழியனும், அவரது மனைவி கிரித்தாவும் மருத்துவர்கள் ஆவார்கள்.

பி.மூர்த்தி

வணிகவரித்துறை, பதிவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பி.மூர்த்தி, இவரது சொந்த ஊர் மதுரை வெளிச்சநத்தம். பி.ஏ. படித்துள்ளார். மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

கடந்த 2006-ம் ஆண்டு சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அதன்பின் 2016-ம் ஆண்டு தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். தற்போது அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

எஸ்.எஸ்.சிவசங்கர்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சிவசங்கருக்கு 51 வயதாகிறது. என்ஜினீயரிங் படித்துள்ள இவரின் சொந்த ஊர் அரியலூர் ராஜாஜி நகர் ஆகும். சிவசங்கருக்கு டாக்டர் காயத்ரிதேவி என்ற மனைவியும், சிவசரண், சிவசூர்யா என்ற 2 மகன்களும் உள்ளனர்.

சேகர் பாபு

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான பி.கே.சேகர்பாபு (வயது 58), சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மனைவி பெயர் சாந்தி. பி.எஸ்.விக்னேஷ், பி.எஸ்.ஜெயசிம்மன் என்ற 2 மகன்களும், பி.எஸ்.ஜெயகல்யாணி என்ற மகளும் உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள பி.கே.சேகர்பாபு, 2001, 2006-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. சார்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதும் அதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மத்தி தொகுதியில் வெற்றி பெற்றவர். இவரது தந்தை பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருந்தவர்.

ஆவடி சா.மு.நாசர்

பால்வளத்துறை அமைச்சரான சா.மு.நாசர் (61) ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள சா.மு.நாசருக்கு பாத்திமா கனி என்ற மனைவியும், ஆசிம் ராஜா என்ற மகனும் உள்ளனர்.

ஆவடி சட்டமன்ற தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக போட்டியிட்டுள்ளார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனை வீழ்த்தி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (66) விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். இவருக்கு சைத்தானி பீ மஸ்தான் என்கிற மனைவியும் கே.எஸ்.எம்.மொக்தியார் மஸ்தான் என்கிற மகனும், மைமுன்னிசா, ஜெய் முன்னிசா, தை முன்னிசா என்கிற மகளும் உள்ளனர். செஞ்சி தேசூர் பாட்டையில் வசித்து வருகிறார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளி கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 44 வயதாகிறது. இவர் எம்.சி.ஏ. பட்டதாரி.

மறைந்த முன்னணி தி.மு.க. தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் பேரன், முன்னாள் எம்.எல்.ஏ. மறைந்த அன்பில் பொய்யாமொழியின் மகன் என்ற பாரம்பரிய பெருமையும் இவருக்கு உண்டு.

சிவ.வீ.மெய்யநாதன்

சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரான ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிவ.வீ.மெய்யநாதனுக்கு 51 வயதாகிறது. எம்.சி.ஏ. படித்துள்ளார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மறமடக்கி ஆகும்.

சி.வி.கணேசன்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரான சி.வி.கணேசன் (57) திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார்.

மனோ தங்கராஜ்

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோ தங்கராஜ் (54) குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றி பெற்றவர். எம்.ஏ., எம்.பில் முடித்தவர்.

மதிவேந்தன்

சுற்றுலாத்துறை அமைச்சரான டாக்டர் மதிவேந்தன் (வயது 36) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் (தனி) சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றவர். எம்.பி.பி.எஸ்., எம்.டி. படித்துள்ள இவர் டாக்டர் பணி செய்து வருகிறார். தற்போது ராசிபுரத்தில் வசித்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி சிவரஞ்சினி என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். டாக்டர் மதிவேந்தன் ராசிபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜாவை தோற்கடித்து அமைச்சராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கயல்விழி செல்வராஜ்

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற என்.கயல்விழி செல்வராஜ் (53) தாராபுரம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்றவர். எம்.காம்., பிஎட்., படித்துள்ளார்.

இவர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை தி.மு.க மகளிரணியில் உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் கே.செல்வராஜ் பி.ஏ.பி.எல் படித்து வக்கீலாக உள்ளார். இவர்களுக்கு பட்டதாரியான எஸ்.திலீபன், வக்கீலுக்கு படித்த எஸ்.கே.உதயசூரியன் ஆகிய மகன்கள் உள்ளனர்.
Tags:    

Similar News