செய்திகள்
கோப்புபடம்

சொந்த ஊரில் ஓட்டு போடுவதற்காக 3,515 பஸ்களில் இன்று மேலும் 1.50 லட்சம் பேர் பயணம்

Published On 2021-04-05 05:48 GMT   |   Update On 2021-04-05 05:48 GMT
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்கவுள்ள நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 4 நாட்களில் 4 லட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்கிறது. இதை தொடர்ந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் கடந்த 1-ந் தேதி முதல் ஓட்டு போடுவதற்காக பொதுமக்கள் வெளியூர் செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 4 நாட்களில் 4 லட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர். 10 ஆயிரத்து 500 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

நாளை தேர்தல் நடைபெறுவதால் இன்று வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி பணிபுரியக்கூடிய கூலித்தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் இன்று மாலையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கிறார்கள்.

தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கப்படுவதால் அனைவரும் ஓட்டுப்போட சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள்.


கடைசி நேரத்தில் கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால் அதற்கேற்றவாறு சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகங்கள் தயார் நிலையில் உள்ளன.

சென்னையில் இன்று வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் நெரிசல் இல்லாமல் செல்ல வசதியாக 5 பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு, மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் இருந்து பண்டிகை காலத்தில் சிறப்பு பஸ்களை இயக்குவது போல நேற்று முதல் இயக்கப்படுகிறது.

இன்றும் அதே போல ஒவ்வொரு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வழக்கமாக இயக்கக் கூடிய 2,225 பஸ்களுடன் கூடுதலாக 1,290 சிறப்பு பஸ்களை இயக்க தயாராக உள்ளனர். எந்தெந்த பகுதிகளுக்கு தேவை இருக்கிறதோ அதற்கேற்றவாறு பஸ்களை இயக்க தயாராக உள்ளனர்.

மொத்தம் 3,515 பேருந்துகள் காலை முதல் இயக்கப்படுகிறது. இன்று 1.50 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாலை வரையிலும் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு பஸ் வசதி செய்யப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை திரும்ப மேலும் 54 ஆயிரம் பேர் இன்று பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தற்போது பயணம் செய்ய முடியும். முன்பதிவு அல்லாத பெட்டிகள் இல்லை. அதனால் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் அரசு பஸ்களைதான் நம்பி உள்ளனர். அதனால் மாலையில் இருந்து கூட்டம் குவியத் தொடங்கி விடும்.

மேலும் தேர்தல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரும் வகையில் நாளை (6-ந் தேதி) முதல் 7-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தினசரி இயக்கப்படுகின்ற 2,225 பேருந்துகளுடன் 2,115 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களில் இருந்து திருப்பூர் கோவைக்கும், சேலம், திருவண்ணாமலை, வேலூரில் இருந்து பெங்களூருக்கும் என மொத்தம் 1,738 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் 5 பஸ் நிலையங்களுக்கு பொது மக்கள் செல்ல இனைப்பு பேருந்து வசதி அளிக்கப்பட்டு உள்ளது.

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 230 பஸ்கள் சிறப்பு பஸ் நிலையங்களுக்கு விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியூர் பயணம் தடையின்றி மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் போக்குவரத்து கழகங்கள் செய்துள்ளன. பஸ் நிலையத்திலும் அதிகாரிகள் கண்காணித்து பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை இயக்கவும் தயாராகி வருகின்றனர்.

Tags:    

Similar News