செய்திகள்
தபால் வாக்கு பெட்டி

திருச்சியில் போலீசாருக்கு பணப்பட்டுவாடா- சிபிஐ விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை?

Published On 2021-03-31 07:21 GMT   |   Update On 2021-03-31 07:21 GMT
தபால் ஓட்டுக்கும் பணப்பட்டுவாடா நடந்துள்ளது விசுவரூபம் எடுத்துள்ளதால் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்கள்தான் உள்ளன.

இந்த தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 1 லட்சம் போலீசார் தபால் வாக்கு போட தேர்தல் கமி‌ஷன் விரிவான ஏற்பாடு செய்திருந்தது.

அதன்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தபால் ஓட்டுக்கான விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இதில் திருச்சியில் உள்ள தபால் ஓட்டுகளை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள ஒரு அரசியல் கட்சி ‘கவர்’களில் பணப்பட்டுவாடா செய்துள்ளது.

இந்த தகவல் தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு தெரிய வந்ததின் பேரில் போலீஸ் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டனர்.

அதன் பேரில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருச்சி தில்லைநகர் போலீஸ் நிலையம், திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் போலீஸ் நிலையங்களில் இருந்து கவர், கவராக லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. போலீசார் போட இருந்த தபால் ஓட்டுக்காக இந்த பணம் கொடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக தில்லை நகர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்பட 6 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

ஒரு அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இவர்கள் செயல்பட்டது தெரிய வந்ததால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு முதலில் உத்தரவிடப்பட்டது.

அதன்படி தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை கண்காணித்து பிடிப்பதுதான் போலீசாரின் வழக்கம். ஆனால் இவ்வாறு போலீசாரின் ஓட்டுக்கே அரசியல்வாதிகள் பணம் கொடுக்கும் கலாசாரம் வந்துவிட்டதால் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் லோகநாதன் அதிரடியாக நேற்று இடமாற்றம் செய்யப்பட்டார். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை நேற்று இரவு பிறப்பித்தது. அவரை தேர்தல் அல்லாத பணியில் அமர்த்தவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இதேபோல் பொன்மலை உதவி கமி‌ஷனர் தமிழ் மாறனை சஸ்பெண்ட் செய்தும் தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் திருச்சியில் நடைபெற்று வந்த பணப்பட்டுவாடா சம்பந்தமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அவ்வப்போது அறிக்கை அளித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் தான் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். பணப்பட்டுவாடா சம்பவங்களில் உயர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருப்பார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யவும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதில் இன்று தேர்தல் கமி‌ஷன் இறுதி முடிவெடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த சிவராசு தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டிருந்தார். போலீஸ் சூப்பிரண்டு ராஜன், ஸ்ரீரங்கம் துணை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணனும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.

திருச்சி முசிறி பெட்ட வாய்த்தலை அருகே ஒரு கோடி ரூபாய் சாக்கு மூட்டையில் கைப்பற்றப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் இந்த உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்திருந்தது.

இப்போது திருச்சி கலெக்டராக திவ்யதர்ஷிணி, போலீஸ் சூப்பிரண்டாக மயில்வாகனன், துணை கலெக்டராக விசு மகாஜனை நியமித்து தேர்தல ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இப்போது தபால் ஓட்டுக்கும் பணப்பட்டுவாடா நடந்துள்ளது விசுவரூபம் எடுத்துள்ளதால், இதுவும் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News