செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

சென்னையில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம்

Published On 2021-03-27 07:40 GMT   |   Update On 2021-03-27 07:40 GMT
தி.மு.க. வேட்பாளர் எபினேசருக்கு ஆதரவாக கே.எல்.எஸ். டெப்போவிலும், ஜீவரத்தினம் சாலையிலும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
சென்னை:

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். ஆனாலும் தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். சென்னையில் இன்று மாலை 3 தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

திரு.வி.க. நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் தாயகம் கவியை ஆதரித்து டிக்காஸ்டர் ரோட்டில் பிற்பகல் 3 மணிக்கு திறந்த வேனில் இருந்து பேசுகிறார். அதனை தொடர்ந்து பெரம்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர்பாபுவை ஆதரித்து வியாசர்பாடி அசோக் பில்லர் பகுதியில் ஆதரவு திரட்டுகிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் 2 இடங்களில் பேசுகிறார். தி.மு.க. வேட்பாளர் எபினேசருக்கு ஆதரவாக கே.எல்.எஸ்.டெப்போவிலும், ஜீவரத்தினம் சாலையிலும் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

இரவு 8 மணியளவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் பேசுகிறார். திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தெருக்களில் ஆட்டோவில் சென்று தன்னை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு ஆதரவு திரட்டுகிறார். குறுகிய தெருக்களில் ஆட்டோ எளிதாக செல்லும் என்பதால் அதனை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

சென்னையில் 4 தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட இருப்பதால் தி.மு.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். வழிநெடுக அணிவகுத்து அழைத்து செல்கிறார்கள்.
Tags:    

Similar News