செய்திகள்
விஜயகாந்த்

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் விஜயகாந்த் நேர்காணல்

Published On 2021-03-07 10:44 GMT   |   Update On 2021-03-07 10:44 GMT
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ளனர்.

சென்னை:

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. சட்டசபை தேர்தல் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதிவரை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன.

தே.மு.தி.க. சார்பில் போட்டியிட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ளனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து அவரது பெயரில் மனு அளித்துள்ளனர்.

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரன் ஆகியோரும் விருப்பமனு கொடுத்துள்ளனர். பிரேமலதா விருகம்பாக்கம் அல்லது விருத்தாச்சலத்தில் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேற்று நேர்காணல் தொடங்கியது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேர்காணல் நடத்தினார்.

அவருடன் பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நேற்று கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், நெல்லை ஆகிய 14 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது.

இன்று 2-வது நாளாக தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தஞ்சை, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு ஆகிய 13 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது.

நாளை (8-ந்தேதி) மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சீபுரம், சென்னை ஆகிய 11 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடக்கிறது. நாளையுடன் நேர்காணல் முடிவடைகிறது.

Tags:    

Similar News