செய்திகள்
முக ஸ்டாலின்

திமுக வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்கியது

Published On 2021-03-02 04:37 GMT   |   Update On 2021-03-02 04:37 GMT
சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் தொடங்கியது.
சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை உறுதி செய்து ஒதுக்கி கொடுப்பதில் திமுக. ஆர்வம் காட்டி வருகிறது. இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 2021 சட்டசபை பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கிய திமுகவினரிடம் இன்று (02-03-2021) முதல் 06-03-2021 வரை நேர்காணல் நடத்த உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், விருப்பமனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் இன்று தொடங்கியது. இந்த நேர்காணலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

இன்று காலை கன்னியாகுமரி (கிழக்கு, மேற்கு) தூத்துக்குடி (வடக்கு, மேற்கு), திருநெல்வேலி (கிழக்கு, மத்திய), தென்காசி (வடக்கு, தெற்கு), ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

தொடர்ந்து இன்று மாலை, விருதுநகர் (வடக்கு, தெற்கு), சிவகங்கை, தேனி (வடக்கு, தெற்கு), திண்டுக்கல் (கிழக்கு, மேற்கு) ஆகிய தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

Tags:    

Similar News