செய்திகள்
சீரான வாழ்வருளும் சிரகிரி வேலவன்

கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - சீரான வாழ்வருளும் சிரகிரி வேலவன்

Published On 2021-10-22 14:16 GMT   |   Update On 2021-10-22 14:16 GMT
முக்தி பெறுவதற்கு வழி முருகன் நாமத்தையே புகழ்வது ஆகும். தன் நாமம் உரைக்கும் பக்தர்களைக் காக்கவே கந்தன் பல இடங்களில் குடி கொண்டுள்ளான். அதில் சிறப்பானது சிரகிரி என்றழைக்கப்படும் சென்னிமலை.
சம்சாரமெனும் சாகரத்தைத் தாண்டுவது எப்படி?
மனித வாழ்க்கை, ஆசாபாசங்களில் சிக்கி, ஆணவம், பொறாமை, ஆசை என்னும் குழியில் அழுந்திச் சீரழிகின்றது அல்லலுறும் மானுட வர்க்கத்தைக் காப்பாற்றும் தோணியாகத் திகழ்வது முருகனின் நாமம்.

கடலில் மூழ்கிப் போகாமல் துடுப்பாக இருந்து நம்மைக் கரை சேர்ப்பது அவனின் நாமமே. தீராப்பிணியாகத் திகழும் நம் கர்மவினையின்  தீவினைகள் நீங்கும். அருணகிரியார் அந்த வினை தீர்க்கும் நாமத்தைத் தரும்படி வேண்டுகிறார் முருகனிடம்.
“தீராப்பிணி தீர, ஜீவாத்ம ஞான ஊராட்சிய தான ஓர் வாக்கருள்வாய்”- என்று கேட்கிறார். முருகா, ஆறுமுகா, சண்முகா, என்று கூறினாலே அதற்குள் மற்ற நாமங்கள் எல்லாம் புகுந்து கொண்டு விடுகின்றன.முருகா என்றால் முக்திப் பேறு கிடைக்கும். எனவே அவன் நாமத்தை, மயிலை, வேலாயுதத்தை போற்றிக் கொண்டாடு என்கிறார் தன் கந்தரலங்காரத்தில்.

பாலை ஒத்தது பெண்களின் சொல். பஞ்சை ஒத்தது பாதம், கண்கள் கெண்டை மீனை ஒத்தவை என்று மனமானது மயங் கித் திரிகிறது. மனமே நீ முருகனின் வேலாயுதத்தை போற்றவில்லை, வெற்றி பொருந் திய மயிலைப் போற்ற வில்லை. வெட்சி மலரையும், தண் டையையும் போற்றவில்லை. பின் நீ எப்படி முக்திப் பேற்றை அடைவாய்? என்று கேட்கிறார்.
முக்தி பெறுவதற்கு வழி முருகன் நாமத்தையே புகழ்வது ஆகும். தன் நாமம் உரைக்கும் பக்தர்களைக் காக்கவே கந்தன் பல இடங்களில் குடி கொண்டுள்ளான். அதில் சிறப்பானது சிரகிரி என்றழைக்கப்படும் சென்னிமலை.

சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயம். புராணச் சிறப்பு பெற்ற மலை. அனந்தன் என்ற நாகத்திற்கும், வாயுதேவனுக்கும், இடையே யார், பெரியவர் என்ற போட்டி வர அந்தச்சண்டையில்,மேரு மலை உடைந்து பல பகுதிகளாக  விழுந்தது. அதில் சிகரம் விழுந்த பகுதியே சென்னிமலை.சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்ற வேறு சிறப்புப் பெயர்களும் உண்டு.

இந்த மலையின் ஒரு பகுதியில் ஒரு காராம் பசு தினசரி ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. அதைக் கண்ட அதன் உரிமையாளர் அந்த இடத்தைத் தோண்ட, உள்ளே பூரண முகப் பொலிவுடன், முருகனின் சிலை கிடைத்தது. ஆனால் இடுப்புக்குக் கீழ் சரியான வேலைப்பாடும், பொலிவும் இல்லாமல் கரடு, முரடாக இருந்தது. எனவே ஒரு சிற்பியைக் கொண்டு உளியால் அந்த இடத்தைச் சரி செய்ய முயன்ற போது, சிலையிலிருந்து ரத்தம் கொட்டியது. எனவே அந்தச் சிலையை அப்படியே பிரதிஷ்டை செய்தார்கள்.

மூலவராக, சென்னி மலை முருகன் நடுநாய கமாக வீற்றிருக் கிறார். செவ்வாயின் அம்சமாக இவர் விளங்குகிறார். மூலவரைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்கள் அழகுற அமைந்துள்ளன. மூலவரை வணங்கினாலே, அனைத்து நவகிரகங்களை வணங்கிய பலன் உண்டு.

வள்ளி, தெய்வானை இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் வீற்றிருக்கும் சன்னதி இங்கு மட்டுமே உள்ளது சிறப்பு. முருகனின் தினசரி அபிஷேகம், நைவேத்திய  காரியத்திற்காக திருமஞ்சன தீர்த்தம் இரண்டு பொதி காளைகள் மூலம் அடிவாரத்திலிருந்து கொண்டு வரப்படுகிறது. மொத்தம் 1320 படிகள் கடந்து செல்ல வேண்டும்.

காளைகள் சிறிதும் சிரமம் இன்றி தீர்த்தக் குடங்களைச் சுமந்து செல்வது காண வேண்டிய சிலிர்ப்பான விஷயம். முருகனே இகத்துக்கும், பரத்துக்கும் இறைவன். முத்தமிழுக்கும் முதல்வன்.

“பகலிரவினிற்  தடுமாறா பதிகுருவெனத் தெளிபோத  ரகசியமுரைத் தநுபூதி ரதநிலைதனைத் தருவாயே“ என்று வேண்டுகிறார் அருணகிரியார். வேண்டுவதை வேண்டியபடித் தருபவன் கார்த்திகேயன். சென்னிமலையில் எல்லா நாளும் உற்சவ நாட்களே என்றாலும், தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். முருகனுக்குச் சிறப்பாக தேரோட்டம் நடைபெறுகிறது.

தைப்பூசம், பங்குனி உத்திரத் திருநாளில் முருகன் திருவீதி உலா வருவதற்கு இரண்டு  தேர்கள் உள்ளன. இதில் தைப்பூசத் தேர் இருநூறு ஆண்டுகள் பழமையானது. வாகை, வேங்கை, ஈட்டி, தேக்கு ஆகிய மரங்களால் இத்திருத்தேர் உருவாக்கப் பட்டுள்ளது. நாற்பது அடி உயரம் உள்ள தேரின் பீடம் இருபது அடி, பன்னிரண்டு அடி நீளம், பதினைந்து அடி அகலமும் கொண்ட தேரின் சுற்றளவு, ஐம்பத்து நாலு அடி, எட்டடி உயரத்தில் ஆறு கரங்களைக் கொண்ட தேரில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன.

ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் சுப்ரமனிய சுவாமி நான்கு ரத வீதிகளில் உலா வருவது கண்கொள்ளாக் காட்சி. இதே போல் பங்குனி உத்திரத்துக்கு என்று தனித் தேர் உண்டு. இது வேறு எந்தத் தலத்திலும் இல்லாத சிறப்பு.  

இங்குள்ள மாமாங்கத் தீர்த்தம், கடுமையான வறட்சி காலத்திலும், கடுமையான கோடை காலம், மழை இல்லாத நாட்களிலும் பொங்கி வழிந்தோடுகிறது. மலைக் கோவிலுக்கு தென்புறத்தில் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு மாமாங்கத் தீர்த்தம் அமைந்துள்ளது.

கந்தனை மணக்க அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயருடன் தவம் செய்து இருவரும் ஒருவரே என்று உணர்த்த வள்ளி, தெய்வானை உருவங்கள் ஒரே கல்லில் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு அக்னிஜாத மூர்த்தி என்று இரண்டு தலைகள் உள்ள சுப்ரமணியர் இருப்பது இங்கு மட்டுமே.

இங்கு முருகன் தன்னைத் தானே பூஜித்துக் கொண்ட சிறப்பு. இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் நிகழ்ந்த தளம் இது.
மலைமேல் பிண்ணாக்கு சித்தர் சன்னதி உள்ளது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இவர் தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு பின் நாக்கை மடித்து அருள்வாக்கு சொல்வதால் சித்தருக்கு இந்தப் பெயர். வேல்கள் நிறைந்து காணப்படும் இதன் அருகே சரவண மாமு னி வரின் சமாதிக் கோவிலும் அமைந்துள்ளது. சின்னிமலையின் முழுப்பெயர் சிரகிரி. சிரம் என்றால் சென்னி, கிரி என்றால் மலை. இக்கோவிலில் உள்ள கல் வெட்டுகள் பல மன்னர்கள் மற்றும் பாண்டிய கோமாறவர்மன் சுந்தர பாண்டியன், மைசூர் தேவராஜா உடை யார், செய்துள்ள கைங் கர்யங்களைக் குறிக்கிறது.

பல கல்வெட்டுகள் சிதிலமடைந்து உள்ளன. பழங்காலம் தொட்டே சிறப்புடன் விளங்கிய சென்னிமலை பற்றி நிறையத் தமிழ் பாடல்கள் உள்ளன. சென்னிமலை பிள்ளைத் தமிழ், சென்னியாண்டவர் காதல், சென்னிமலை யாக அந்தாதி, மேழி விளக்கம், திருப்புகழ் ஆகியவை முருகனின் பெருமையையும், இத்தளத்தின் சிறப்பையும் விளக்குகின்றன.

பிரார்த்தனைத் தலங் களில் முக்கியமானது. சகலவிதமான நோய் களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்தவனாக முருகன் காட்சி அளிக் கிறான். நோய் நீக்கி, துன்பம் நீக்கி, ஆயுள், கல்வி, அறிவு, செல்வம் என்று சகலமும் அளிப்பவன்.

தன் பக்தர்களாகவே மாறி அவர்கள் உள்ளத்தில் உறைபவன் முருகன். முருகன் வேறு, தான் வேறு என்று பிரித்துணர முடியாத நிலையில் அவர்களுக்குள் முருகன் ஐக்கியமாகி விடுவான். இதயம் இடைவிடாமல் துடித்துக்கொண் டிருப்பதைப் போல் முருகனின் நாமத்தையும் ஜெபிக்கவேண்டும். சபத் ரூபமாய் எங்கும் நிறைந்திருப்பவன் செந்தில் வேலவன்.

சரவணபவ, குகாய நம என்று சொல்லிக் கொண்டிருந்தால்  அவன் நம்மை ராஜ்ஜிய அரசாங்கத்துக்கு அதிபதி ஆக்கி விடுவான். ஓம்கார இடத்தை அடைய முருகா, கந்தா, குமரா என்று சொல்லிக்கொண்டு ஏறி விடலாம். இதைத்தான்  “ஆன தனி மந்த்ர ரூபநிலை கொண்ட, தாடு மயிலென்பதறியேனே”- என்கிறார் அருணகிரிநாதர்.

பிரம்மாவால் எழுதப்பட்ட தலை எழுத்தை மாற்றக் கூடிய வல்லமை முருகனின் நாமத்திற்கே உண்டு. அவனின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் நம்மைச் சகல ஆபத்துக்களில் இருந்தும் காப்பாற்றுவான் சுனையோடரு வித்துறையோடி தனோடு திரிந்தவனே வீடுமசுரர் மாமுடிவேதமும் வெங்காடும் புனமும் கமழும்கழலே என்று முருகனின் பாதார விந்தங்களின் பெருமை யைக் கந்தர் அனுபூதியில் கூறுகிறார் அருணகிரிநாதர்.

இயற்கை மூலிகைகள், செடிகள் நிறைந்த இந்த மலைப் பகுதியில் வீசும் காற்று, பல நோய்களைத் தீர்க்கிறது. ரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா, நெஞ்சுவலி, போன்றவை குணமாகிறது என்று அனுபவ பூர்வமாக உணர்ந்த பக்தர்கள் கூறுகிறார்கள்.

முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிர் புளிப்பதில்லை. தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறிய பக்தர்கள், காவடி எடுத்தல்,  பால்குடம் எடுத்தல், அன்னதானம் செய்தல், கந்த சஷ்டி விரதம் இருத்தல், என்று தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறார்கள்.
இங்கு குழந்தை வரம் கேட்டு சஷ்டி விரதம் இருக்கிறார்கள். சில நல்ல விஷயங்கள் செய்பவர்கள் முருகனுக்கு அர்ச்சனை செய்து, சிரசில் பூ வைத்து உத்திரவு கேட்கிறார்கள்.

தன்னையே நம்பி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி, சீரான வாழ்வு அருள்கிறான் சிரகிரி வேலவன்.
Tags:    

Similar News