செய்திகள்
குரு வழிகாட்டும் கைவிளக்கு

ஆன்மிக அமுதம் - குரு வழிகாட்டும் கைவிளக்கு

Published On 2021-10-22 08:38 GMT   |   Update On 2021-10-22 08:38 GMT
தீண்டாமை என்ற கொடிய பாவம் ஒழிய வேண்டும் என்ற நிலை தோன்றும் போது கேரளத்தில் அதன் பொருட்டே நாராயண குரு என்ற மகரிஷி தோன்றுகிறார்.

*ஆன்மிகத்தில் குரு சிஷ்ய உறவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்தந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்றபடி இயற்கை குருநாதர்களைப் படைத்துத் தருகிறது.

வெய்யில் காலத்தில் மக்களுக்குக் குளுமை தேவைப்படும் என்பதால் தான் இயற்கை அன்னை கோடைகாலம் வாட்டும் போது அதிக அளவில் தர்ப்பூசணி, எலுமிச்சை போன்ற பழங்களைப் படைத்தளிக்கிறாள். குருநாதர்களை இயற்கை தோற்றுவிப்பதும் அதுபோன்றதுதான்.

தீண்டாமை என்ற கொடிய பாவம் ஒழிய வேண்டும் என்ற நிலை தோன்றும் போது கேரளத்தில் அதன் பொருட்டே நாராயண குரு என்ற மகரிஷி தோன்றுகிறார். வடக்கே மத நல்லிணக்கம் தேவை என்ற சூழல் எழுந்த போது ஷிர்டி பாபா தோன்றி மத நல்லிணக்கத்தை போதிக்கிறார். ஆன்மிகம் குருநாதர்கள் மூலம் செயல்பட்டு மக்களை நல்வழிப்படுத்துகிறது.

ஆன்மிகத்தில் முன்னேற விரும்பும் ஒருவர் தமக்கு ஏற்ற ஒரு குருவைத் தேடி அடைய வேண்டும் என்றும் குருவின் வழிகாட்டுதலில்தான் ஆன்மிகப் பாதையில் நடக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

குரு இல்லாமலேயே ஆன்மிகத்தில் முன்னேற முடியாதா என்ற கேள்வியும் எழுகிறது. மாபெரும் ஆன்மிகவாதிகளில் மிகச் சிலர் அவ்விதம் ஆன்மிகப் பேரெல்லைகளை அடைந்திருக்கிறார்கள்.

ஸ்ரீரமணர் பலருக்கு குருவாக இருந்தவர். ஆனால் அவர் குரு இல்லாமல் தானாகவே தவம் செய்து ஆன்மிகத்தின் உச்சத்தை எட்டினார்.

எல்லோருக்கும் இது சாத்தியமாகக் கூடியதல்ல. ஒரு குருவின் உபதேசம் பெற்று அந்த குரு காட்டிய வழியில் சென்று ஆன்மிக நெறியில் முன்னேற்றம் காண்பதே இயல்பானது.  

*கு என்றால் இருள். ரு என்றால் அழித்தல். மனத்தில் உள்ள இருட்டை அழிப்பவரே குரு. எனவே மன இருள் அகல குருவின் பாதங்களைச் சரணடைய வேண்டும் என்கிறது நம் மரபு.

ஒருவேளை நாம் நாடும் குரு போலியானவராக இருந்தால் என்ன செய்வது? எல்லாத் துறையிலும் போலிகள் மிகுந்துள்ள அண்மைக் காலத்தில் இந்தக் கேள்வி பலர் மனத்தில் எழுகிறது.

ஆனால் உண்மை என்னவென்றால் சீடனைக் காப்பாற்றுவது குருவல்ல. குருவின் மீது அவன் கொண்ட நம்பிக்கைதான். குரு போலியானவராக இருந்தாலும் அவர்மேல் ஒருவன் திட நம்பிக்கை வைத்தால் அந்த நம்பிக்கை அவனைக் காப்பாற்றிவிடும்.

குருவிடம், `ஆற்றில் பெருகிவரும் வெள்ளத்தில் நான் அக்கரைக்கு எப்படிச் செல்வது?` எனக் கேட்டான் சீடன். `என் நாமத்தைச் சொல்லியவாறு தண்ணீரின்மேல் நடந்துபோ!` என்றார் குரு.

குருநாதரது வாக்கின்மேல் சீடனுக்கு அளவற்ற நம்பிக்கை. `குருவே சரணம்` என்றவாறு நதிமேல் நடக்கலானான். என்ன வியப்பு! அவன் பாதங்கள் தரைமேல் நடப்பதுபோல் தண்ணீர்மேல் நடந்தன. அவன் அக்கரை சேர்ந்து விட்டான்.

அதைப்பார்த்துக் கொண்டிருந்தார் குரு. நாமத்திற்கு இவ்வளவு மகிமையா? நாமும் நதிமேல் நடப்போம் என எழுந்தார். நானே சரணம் என்றவாறு வெள்ளத்தின் மேல் நடக்க முயன்றார். வெள்ளம் அவரை அடித்துச் சென்று விட்டது.

ஆணவம் குருவை மூழ்கடித்துவிட்டது. குருபக்தி சீடனைக் காப்பாற்றி விட்டது. பிறவிப் பெருங்கடலில் மூழ்காமல் கரை சேர குருபக்தி என்ற ஓடம் தேவைப்படுகிறது.

*ஸ்ரீ ராமபிரானுக்கு குருவாய் அமைந்தவர் வசிஷ்டர். கண்ணக் கடவுளின் குரு சாந்தீபனி முனிவர். தெய்வங்கள் கூட ஒரு குருவைக் கண்டடைந்திருக்கிறார்கள். அதன் மூலம் மக்களுக்கு குரு தேவை என்ற உண்மையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

வசிஷ்டர் மட்டுமல்லாமல் விஸ்வாமித்திரரும் கூடச் சிறிது காலம் ராமபிரானுக்கு குருவாய்ச் செயல்பட்டிருக்கிறார். தாம் நிகழ்த்தும் வேள்வியை அரக்கர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக ராமனையும் லட்சுமணனையும் உடன் அழைத்துச் சென்றார் விஸ்வாமித்திரர். அப்போது பலை, அதிபலை என்ற பசியை நீக்கும் மந்திரங்களை ராம லட்சுமணர்களுக்கு அவர் உபதேசம் செய்தார் என்ற செய்தி ராமாயணத்தில் உண்டு.

வாழ்க்கை என்பது ஓர் இருளடர்ந்த காடு. இதில் இறைவனைக் கண்டடைய ஆன்மிக வெளிச்சம் இருந்தாலன்றி இயலாது. குருவானவர் ஏற்கெனவே இந்த வாழ்க்கைக் கானகத்தில் வழியைக் கண்டுபிடித்து இறைவனை நோக்கி நடந்தவர்.

குருவைச் சரணடைந்தால் அவர் தம் கையில் ஞான விளக்கை ஏந்தி அந்த வெளிச்சத்தில் நம்மைச் சரியான பாதையில் நடத்திச் செல்வார். இவ்விதம் தாம் பெற்றதை சீடனும் பெறச் செய்வதே குருவின் பணி.

குரு தம் மனத்தில் ஏற்றிக்கொண்ட ஞான தீபத்தைச் சீடன் மனத்திலும் ஏற்றுகிறார். ஒரு விளக்கிலிருந்து இன்னொரு விளக்கை ஏற்றிய பிறகு எது முதலில் ஏற்றப்பட்ட விளக்கு என்பதைக் கண்டுபிடிக்க இயலாது. இரண்டுமே சம அளவில் ஒளிவீசத் தொடங்கும். அவ்விதம் குரு தம் சீடனைத் தாம் சிரமப்பட்டு அடைந்த அதே உயரத்திற்கு எளிதாக அழைத்துச் செல்கிறார்.

ஸ்ரீஅரவிந்தரின் சிஷ்யையாக வந்தவர் ஸ்ரீ அன்னை. ஆனால் குருவருளால் பின்னாளில் ஸ்ரீஅரவிந்தரைப் போலவே அவரும் தெய்வ நிலைக்கு உயர்ந்தார் என்பதை வரலாறு தெரிவிக்கிறது.

ஒரு கண்ணாடி பங்களாவில் இரு சகோதரர்கள் வசிக்கிறார்கள். திடீரென பங்களா தீப்பற்றிக் கொள்கிறது. சுற்றிலும் நெருப்பு. கண்ணாடித் துகள்கள் தரையெங்கும் சிதறியிருக்கின்றன.

ஒருவன் தப்பிக்க முயல்கிறான். ஆனால் அவன் வீட்டை விட்டு வெளியேறி ஓட நினைக்கும் போது தரையிலுள்ள கண்ணாடித் துகள்கள் அவன் காலைப் பதம் பார்க்கின்றன. அவனால் தொடர்ந்து ஓட முடியாமல் அவன் தீயில் கருகுகிறான்.

இன்னொருவன் அங்குள்ள திரைச்சீலைத் துணிகளை இழுத்து எடுத்துத் தன் பாதங்களில் அவற்றைச் சுற்றிக் கட்டிக் கொள்கிறான். விறுவிறுவென்று கண்ணாடித் துகள்கள் மேல் நடந்து வீட்டின் வெளியே தப்பித்து ஓடி வந்து விடுகிறான். அவன் தப்ப உதவியது பாதத்தின்மேல் அவன் கட்டிக் கொண்ட திரைச்சீலைத் துணி.

குருபக்தி என்பது அந்தத் திரைச்சீலைத் துணியைப் போன்றது. வாழ்க்கை என்ற வீட்டில் நெருப்புப் பற்றிக் கொள்ளும் போது துயரம் என்ற கண்ணாடித் துகள் நம்மைத் துன்புறுத்தாமல் குருபக்தி என்ற திரைச்சீலைத் துணி நம்மைக் காப்பாற்றி விடும்.

ஒருவருக்கு ஒரு குரு தான் அமைவார் என்பதில்லை. ஒன்றிற்கும் மேற்பட்ட குருநாதர்களும் அமையலாம்.

யோகி ராம்சுரத்குமார் தமக்கு அரவிந்தர், ரமணர், ராமதாசர் என மூன்று குருநாதர்கள் உண்டு என்று சொல்லியிருக்கிறார். அரவிந்தர் மூலம் ஞானம் பெற்றதாகவும், ஸ்ரீரமணர் தவத்தின் மேன்மையைத் தமக்கு போதித்ததாகவும், கேரளத்தைச் சேர்ந்த ராமதாசர் பக்தி நெறியின் முக்கியத்துவத்தை அறிவித்ததாகவும் ஸ்ரீராம்சுரத்குமார் சொன்னதுண்டு.

ஆன்மிகத்தில் ஆண் பெண் என்ற பேதமெதுவும் இல்லை. உடலுக்குத் தான் இத்தகைய மாறுபாடுகள் உண்டே தவிர ஆன்மா பால்பேதமற்றது. பெண்களும் உயர்ந்த குருநிலையில் இயங்கியிருக்கிறார்கள்.

மாதா ஆனந்தமயி அவ்விதம் இயங்கிய உயர்நிலைக் குருமார்களில் ஒருவர். அவரால் ஈர்க்கப்பட்ட இந்திராகாந்தி அவரிடம் ஒரு ருத்திராட்ச மாலையைக் கேட்டுப் பெற்று அணிந்து கொண்டிருக்கிறார்.

நிர்மலாதேவி என்பது ஆனந்தமயி தேவியின் பூர்வாசிரமப் பெயர். அவர் திருமணமானவர். கணவரின் பெயர் போலோநாத்.

பரமஹம்ச யோகானந்தர் ஒருமுறை ஆனந்தமயி தேவியைச் சந்தித்தபோது, `நீங்கள் துறவியாவதற்கு முன் திருமணமானவர் என்று அறிந்தேன், உங்கள் கணவர் இப்போது எங்கே இருக்கிறார்?` எனக் கேட்டார். அதற்கு நகைத்தவாறே பதில் சொன்னார் ஆனந்தமயி தேவி:

`அதோ என் முன்னிலையில் உள்ள சீடர்கள் மத்தியில் முதல் வரிசையில் அமர்ந்திருக்கிறாரே? அவர்தான் நீங்கள் சொல்லும் நபர். இப்போது அவர் என் சீடர்!`

பாரதியாரின் குரு நிவேதிதா தேவி. நிவேதிதையின் குரு விவேகானந்தர். மெத்தப் படித்த விவேகானந்தர் அதிகப் படிப்பறிவற்ற பரமஹம்சரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார். பரமஹம்சருக்கு குருவாக இருந்து பல்வேறு தாந்திரிக சாதனைகளைக் கற்பித்தவர் பைரவி பிராம்மணி என்ற பெண்மணி.

பிறவியிலேயே கண்பார்வை அற்ற கிருஷ்ண பக்தரான சூர்தாஸருக்கு குருவாக அமைந்தவர் மதுராஷ்டகம் எழுதிய ஸ்ரீவல்லபாச்சாரியார்.

அத்வைதத்தை போதித்த ஆதிசங்கரரின் குரு ஸ்ரீகோவிந்த பகவத் பாதர். துவைதத்தை உபதேசித்த ஸ்ரீமத்வரின் குரு அச்சுதப்ரக்ஷர்.
குருவே தம் சீடரிடம் சீடரான விந்தையான சம்பவமும் நம் ஆன்மிக வரலாற்றில் உண்டு. ஸ்ரீராமானுஜரின் குரு யாதவப் பிரகாசர். தம் சீடரின் புகழைக் கண்டு பொறாமை கொண்ட அவர் தம் சீடரைக் கொல்லவும் ஏற்பாடுகள் செய்தார்.

ஆனால் பின்னாளில் தம் சீடர் ராமானுஜரின் உண்மையான பெருமைகளை உணர்ந்து கொண்டார். அதனால் ஒருகாலத்தில் தம் சீடராக இருந்த ராமானுஜரிடமே பிற்காலத்தில் தாம் சீடரானார் யாதவப் பிரகாசர்.

காஞ்சி மகாசுவாமிகளை ஜகத்குரு என அடியவர்கள் போற்றினார்கள். இந்த உலகம் முழுவதற்கும் அவர் குருவா என்ற விமர்சனம் எழுந்தது. அப்போது மகாசுவாமிகள் `ஜகத்குரு என்ற வார்த்தையின் பொருள் இந்த ஜகத்தை நான் குருவாகக் கொண்டிருக்கிறேன் என்பதுதான். உலகமே என்னுடைய குரு. உலகத்திடம் நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன்` எனத் தன்னடக்கத்துடன் பதில் சொன்னார்.

பக்தர்களுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் குருநாதர்கள். பரமஹம்சருக்கும் ரமணருக்கும் ராம்சுரத்குமாருக்கும் ஏன் புற்றுநோய் வந்தது என்ற கேள்விக்கு ஒரு பதில் சொல்லப்படுகிறது. தங்கள் உடல் குறித்து ஒருசிறிதும் அக்கறை கொள்ளாத அவர்கள், பெருங்கருணை காரணமாக அடியவர்களின் கர்ம வினைப் பலனைத் தாங்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றும் அதன் காரணமே அந்த உடல்நோய் என்றும் சொல்லப்படுகிறது.

`குருவை வணங்காமல் குப்பை ஒதுங்காது` என்றொரு வாசகம் சொல்வதுண்டு. மனத்தில் உள்ள பாவக் குப்பை விலகவேண்டுமானால் குரு பக்தி மிகவும் அவசியம். நம் மனத்தை ஈர்க்கும் குருவை குருநாதராக ஏற்று, அவர் காட்டும் நெறியில் ஜபதபங்கள் செய்து ஆன்மிகப் பாதையில் முன்னேறுவோம்.
Tags:    

Similar News