செய்திகள்

ஸ்டெர்லைட் நிறுவனத்தில் எனது மருமகன் காண்டிராக்ட் எடுத்தாரா? - அமைச்சர் குற்றச்சாட்டுக்கு வைகோ பதில்

Published On 2018-05-24 04:16 GMT   |   Update On 2018-05-24 04:16 GMT
‘ஸ்டெர்லைட்’ நிறுவனத்தில் வைகோவின் மருமகன் ‘காண்டிராக்ட்’ எடுத்து இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். அதற்கு வைகோ பதில் அளித்துள்ளார். #ministerjayakumar #vaiko
சென்னை:

அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது அவர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன், ஸ்டெர்லைட் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுத்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.



இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் வைகோ, நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

1986-ல் இருந்து ‘எல் அண்டு டி’ நிறுவனத்தின் தூத்துக்குடி மாவட்ட ‘ஸ்டாக்கிஸ்டாக’ எனது சகோதரி மகன் ஜெகதீசன் இருந்து வந்தார். 1996-ல் ‘ஸ்டெர்லைட்’ நிறுவனம் இயங்க தொடங்கியபோது, ‘எல் அண்டு டி’ நிறுவனத்துக்காக ‘வெல்டிங் ராடு’ வேலைகள் செய்து கொடுத்துள்ளார்.

இந்த விவரம் எதுவும் அக்காலத்தில் முதலில் எனக்கு தெரியாது. 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘ஸ்டெர்லைட்’ நிறுவன அதிபர் அனில் அகர்வால் எனது மருமகனை சந்திக்க ஆள் மேல் ஆள் அனுப்பியும் என் மருமகன் சந்திக்க மறுத்துவிட்டார். மேலும், அதே 2000-ம் ஆண்டில், இந்திய அரசின் அட்டார்னி ஜெனரல் ஜி.ராமசாமி டெல்லியில் இருந்து சென்னை தாயகம் வந்து, ‘ஸ்டெர்லைட்’ அதிபர் அனில் அகர்வால் என்னை சந்திக்க விரும்புவதாகவும், எங்கு அழைத்தாலும் அவர் வருவார் என்றும் தெரிவித்தார்.

ஆனால், நான் அவரை ஒரு நிமிடம் கூட சந்திக்க மாட்டேன் என மறுத்து அனுப்பினேன். இதை 100-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் நான் தெரிவித்து இருக்கிறேன். 2002-க்கு பிறகு எனது மருமகன் ‘எல் அண்டு டி’ ‘ஸ்டாக்கிஸ்டு’ உரிமையையே வேண்டாம் என்று விலக்கிக் கொண்டார்.

இந்த நிலையில், 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு ‘ஸ்டெர்லைட்’ பிரச்சினை காரணம் என்று ஒரு வாரப்பத்திரிகை கட்டுரை வெளியிட்டு இருந்தது. உண்மையில், நான் தமிழக மக்கள் நலனுக்காக அணு அளவும் சுயநலம் இன்றி என்னை அர்ப்பணித்து ஊழியம் செய்து வருகிறேன். என் மனசாட்சிக்கு நேர்மையாக நடக்கிறேன். என் உயிர் மூச்சு அடங்கும் வரை அப்படியே வாழ்வேன்.

இவ்வாறு அவர் கூறினார். #ministerjayakumar #vaiko

Tags:    

Similar News