செய்திகள்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: திருநாவுக்கரசர்

Published On 2017-01-26 09:14 GMT   |   Update On 2017-01-26 09:14 GMT
சென்னை கலவரத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறினார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தின்போது இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது. நடுக்குப்பம் மீனவர்களின் மீன் மார்க்கெட் தீ வைத்து எரிக்கப்பட்டு பல லட்சம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் கடைகள் சேதமானது. இத னால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள மீனவர்களின் வீடுகளில் போலீசார் ஆண்களை பிடித்து சென்று கைது செய்துள்ளனர். மேலும் பலரை தாக்கியுள்ளனர். மோட்டார்சைக்கிள்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் காங்கிரஸ் வக்கீல் ஒருவர் ஆஜராகி வாதாடுவதாக தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறு. காங்கிரஸ் கட்சி எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செயல்படும். காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் எதுவும் போடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News